Published : 15 Nov 2022 08:13 AM
Last Updated : 15 Nov 2022 08:13 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியை 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
உ.பி.யின் புகழ்பெற்ற வாரணாசி நகரில், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 19-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ரயில்வே, சுற்றுலா மற்றும் கலாச்சார துறைகள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வருகின்றன. தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு உள்ளிட்ட பல அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இது நடைபெறுகிறது. மேலும், நிகழ்ச்சிக்கு வரும் தமிழர்கள், வாரணாசி பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அமைய உள்ளது.
உ.பி.யின் தெய்வீக நகரமான வாரணாசி, பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாக உள்ளது. இதனால், பிரதமர் மோடியின் யோசனையில் உருவான நிகழ்ச்சி இது. இதற்கான ஏற்பாடுகள் பிரமதரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றன.
நிகழ்ச்சி அமைப்பாளராக பாரதிய பாஷா சமிதியின் தலைவர் பத்ம ஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரியை பிரதமர் மோடி நியமித்துள்ளார்.
தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ‘‘காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவதை நினைத்து நான் உற்சாகத்தில் இருக்கிறேன். ஒரே நாடு ஒரே அமைப்பு எனும் அடிப்படையில் துளிரும் நிகழ்ச்சியில் அழகான தமிழ் மொழியுடன் அதன் கலாச்சாரமும் கொண்டாடப்பட உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த பழம்பெரும் மத்திய கல்வி நிறுவனத்துடன் சென்னை ஐஐடியும் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்கு கொள்கிறது. இந்நிகழ்ச்சிக்கான முக்கிய ஒருங்கிணைப்பில் பாஜக ஆளும் உபி அரசும் இணைந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து முதல்வர் ஆதித்யநாத், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது, ‘‘தமிழ் மொழியானது சிவனின் திருவாயில் இருந்து வெளியான மொழி. இது சம்ஸ்கிருதத்துக்கும் இணையான மொழி. இம்மொழியை பேசும் தமிழ் மக்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, நம் மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பதாகும்.
இதனால், தமிழகத்தில் இருந்துவருபவர்கள் அனைவரும் நமது உயரிய விருந்தினர்கள். அவர்களது வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒரு சிறு பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் அனைவரது கடமை’’ என்று அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 5,000 பேர் வருகை புரிய உள்ளனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 12 குழுவினர் வருகை புரிய உள்ளனர். அனைவரையும் அலகாபாத் மற்றும் அயோத்திக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நூல்களின் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
இதில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மைசூர் மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் போன்ற நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. கண்காட்சியில் பங்கேற்க தமிழக அரசுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT