Published : 14 Nov 2022 04:40 AM
Last Updated : 14 Nov 2022 04:40 AM
திருச்சூர்: கேரளாவில் திரிசூர் மாவாட்டத்தில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனமொன்று மாணவர்களுக்கு சம்ஸ்கிருதத்தை கற்றுக்கொடுத்து முன்மாதிரியாக திகழ்கிறது.
இதுகுறித்து மாலிக் தீனார் இஸ்லாமிக் கம்ப்ளக்சால் (எம்ஐசி) நடத்தப்படும் ஷரியா அண்ட் அட்வான்ஸ்டு கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஓனம்பில்லி முகமது பைஸி தெரிவித்ததாவது:
எங்களது கல்வி நிறுவனத்தில் சம்ஸ்கிருதம், உபநிடதங்கள், புராணங்கள் போன்றவை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இதன் முக்கிய நோக்கம், பிற மதங்களைப் பற்றிய அறிவையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே.
சங்கர தத்துவத்தை படித்து உணர்ந்தவன் என்ற வகையில் எனது மாணவர்கள் மாற்று மதங்களையும், அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அந்த வெளிப்பாட்டின் அடையாளமாகவே சம்ஸ்கிருதம் எங்களது கல்வி நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஆயினும், உபநிடதங்கள், சாஸ்திரங்கள், வேதாந்தங்கள் போன்றவற்றை ஆழமாக கற்றுணர இந்த எட்டாண்டுகால படிப்பு காலத்தில் சாத்தியமில்லை.
எனவே அதற்கு மாற்றாக, இவற்றை பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதும். மற்ற மதங்களைப் பற்றிய புரிதலையும். விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்துவதே எங்களது கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.
பகவத் கீதை, உபநிடதங்கள், மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றில் உள்ள முக்கிய பகுதிகளை 10-வது தேர்ச்சி பெற்ற பிறகு, எட்டாண்டு காலத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது.
எங்கள் நிறுவனம் முதன்மையான ஒரு ஷரியத் கல்லூரியாக இருப்பதாலும், இது காலிகட் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாலும், கலைப் பட்டப்படிப்பைத் தவிர, ஆங்கிலம், உருது போன்ற பிற மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT