Published : 14 Nov 2022 07:21 AM
Last Updated : 14 Nov 2022 07:21 AM

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா செல்கிறார்.

கடந்த 1999-ல் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இந்தோனேசியா, இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தோனேசியாவின் பாலி தீவில் 15, 16-ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ரஷ்ய அதிபர் புதின் சார்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ் கலந்து கொள்கிறார்.

மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா புறப்படுகிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவு செயலர் வினய் குவாத்ரா நேற்று கூறியதாவது:

3 நாட்கள் பயணம்

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று பாலி புறப்படுகிறார். அங்கு நடைபெறும் மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் ஆகிய 3 தலைப்புகளில் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜி-20 நாடுகளின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேச உள்ளார்.

மாநாட்டின் போது ஜி20 தலைமையை இந்தியா ஏற்கும். இதையொட்டி சில நாட்களுக்கு முன்பு, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி-20 அமைப்புக்கான கருப்பொருளை பிரதமர் வெளியிட்டார். தாமரையில் பூமி வீற்றிருப்பது போன்ற இலச்சினையும் அவர் வெளியிட்டார். வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா செயல்படத் தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் மனோஜ் குமார் கூறும்போது, “ஜி20 மாநாட்டில் இந்தியாவின் சாதனைகளை பிரதமர் மோடி எடுத்துரைப்பார். அண்மையில் அவர் வெளியிட்ட கருப்பொருள், இலச்சினை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியின் ராஜ்ஜிய ரீதியிலான, நட்பு ரீதியிலான உறவு ஜி-20 அமைப்பை மேலும் வலுப்படுத்தும்" என்றார்.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி, சந்திக்கிறார்.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படும். இதை கருத்தில் கொண்டு ஜி-20 நாடுகளின் தலைவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. பாலியின் நூசாதுவா பகுதியில் மாநாடு நடைபெறுகிறது. அங்குள்ள 24 நட்சத்திர ஓட்டல்களில் உலக தலைவர்கள், பிரதிநிதிகள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

சுமார் 18,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 12 போர்க்கப்பல்கள், 13 ஹெலிகாப்டர்கள், 4 போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x