Published : 13 Nov 2022 08:59 PM
Last Updated : 13 Nov 2022 08:59 PM

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை இந்தோனேஷியா செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தோனேஷியா செல்கிறார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஜி20 கூட்டமைப்பின் தலைமையை கடந்த ஓராண்டாக வகித்து வந்த இந்தோனேஷியா, இந்த மாநாட்டோடு அந்த பொறுப்பில் இருந்து அது விடுபடுகிறது. ஜி20 கூட்டமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கிறது. இதன் காரணமாக இந்த மாநாட்டின் இறுதியில் இந்தோனேஷியா, தனது பொறுப்பை இந்தியா வசம் ஒப்படைக்கும் சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. இதன் காரணமாக இந்த மாநாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நாளை இந்தோனேஷியா செல்லும் பிரதமர் மோடி, வரும் 16ம் தேதி நாடு திரும்புகிறார். இந்த மாநாட்டை ஒட்டி இந்தோனேஷியாவில் 45 மணி நேரம் இருக்கும் பிரதமர் மோடி, 10 உலகத் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து உரையாட இருக்கிறார். மொத்தம் 20 நிகழ்வுகளில் அவர் பங்கேற்க இருக்கிறார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியின் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இருக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பில் இருந்து ஒன்றுபட்டு மீள்வோம்; வலிமையுடன் திகழ்வோம் எனும் கருப்பொருளின் அடிப்படையில் உலகத் தலைவர்களின் உரைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, சுகாதாரம், டிஜிட்டல் மாற்றம் ஆகிய தலைப்புகளில் மூன்று அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த மூன்று அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் க்வத்ரா தெரிவித்துள்ளார். கரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியவற்றின் பாதிப்புகளில் இருந்து உலகம் மீள்வதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், இதை ஒட்டி மாநாட்டில் பிரதமர் மோடி தனது செய்தியை அளிக்க இருப்பதாகத் தெரிவித்தார். ஜி20 கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் 3ல் இரண்டையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x