Published : 13 Nov 2022 06:52 AM
Last Updated : 13 Nov 2022 06:52 AM
புதுடெல்லி: இந்து மதத்தின் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1956-ம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ம் ஆண்டில் பவுத்த மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. பிரிவுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த சூழலில் இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2004-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு தலித் கிறிஸ்தவர்களின் தேசிய கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இந்து மதத்தில் பல நூறு ஆண்டுகளாக தீண்டாமை இருந்தது. அதனால் இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. கடந்த 1956-ம் ஆண்டில் அம்பேத்கரின் அழைப்பை ஏற்று இந்து மதத்தின் எஸ்.சி. பிரிவை சேர்ந்த மக்கள், சமூக, அரசியல் காரணங்களால் புத்த மதத்துக்கு மாறினர். இதன் காரணமாக புத்த மதம் மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.சி. பிரிவில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
வெளிநாட்டு மதங்கள்: கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. அந்த மதங்களில் சாதிய நடைமுறை கிடையாது. தீண்டாமை கொடுமை கிடையாது. எனவே பல்வேறு காரணங்களால் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை.
புத்த மதம், சீக்கிய மதத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவதற்காக பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆணையை மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அளித்த பரிந்துரைகள் தெளிவில்லாமல் உள்ளன. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மதம் மாறிய தாழ்த்தப்பட் டோருக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க கோருவது குறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் 2 ஆண்டுகளில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT