Published : 11 Nov 2022 04:02 AM
Last Updated : 11 Nov 2022 04:02 AM
புதுடெல்லி: பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2009-ல் தொடங்கப்பட்ட இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) சார்பில் மக்களுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படுவதுடன், 10 விரல் ரேகைகள், கருவிழிப் படலம் உள்ளிட்ட தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. குழந்தைகளைப் பொறுத்தவரை, 5 வயதானதும் விரல் ரேகை, கருவிழி பதிவு செய்யப்படுகிறது. அவர்களுக்கு 15 வயதானதும், பயோ-மெட்ரிக் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
மேலும், பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறை 16 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், யுஐடிஏஐ சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. https://myaadhaar.uidai.gov.in/ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று, தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT