Published : 10 Nov 2022 07:00 AM
Last Updated : 10 Nov 2022 07:00 AM

ஆந்திராவில் சொத்துக்காக நடந்த கொடூரம் - தாய், மகள் உயிரோடு மண்ணில் புதைப்பு

மண்ணில் புதைக்கப்பட்ட சாவித்ரியை மீட்கும் பொதுமக்கள்.

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மந்தன மண்டலம், ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தாலம்மாள் (68), இவரது மகள் சாவித்ரி (49). இவர்களின் மூதாதையர் சொத்து அதே ஊரில் எச்.பி காலனி பகுதியில் உள்ளது. இந்த சொத்தில் தாலம்மாளின் கணவர் மறைந்த நாராயணாவுக்கும் பங்கு உள்ளது.

ஆனால், அவர் இறந்ததால், நாராயணாவின் சகோதரரின் மகனான ராமாராவ், பிரச்சினைக் குரிய அந்த வீட்டு மனையில் வீடு கட்ட முடிவு செய்து, நேற்று முன் தினம் ஜல்லி மற்றும் மணலை கொண்டு வந்து கொட்டினார். இதில் தங்களுக்கும் பங்கு உள்ளதென தாலம்மாவும், சாவித்ரியும் வீடு கட்டும் இடத்துக்கு சென்று சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த ராமாராவ், தான் டிராக்டரில் கொண்டு வந்த மண்ணை அங்கு உட்கார்ந்திருந்த தாய் மற்றும் மகள் மீது கொட்டினார். இதில் அவர்கள் இருவரும் மண்ணில் உயிரோடு புதைந்தனர். உடனே இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடி வந்து, மண்ணை அகற்றி அவர்களை காப்பாற்றினார்கள்.

இது குறித்து தாலம்மாவும், அவரது மகள் சாவித்ரியும் கொடுத்த புகாரின் பேரில், மந்தன போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, ராமாராவை கைது செய்தனர்.

சொத்துக்காக தாய் மற்றும் மகளை உயிரோடு புதைக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x