Published : 10 Nov 2022 06:50 AM
Last Updated : 10 Nov 2022 06:50 AM
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் புணே நகரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெற்கில் 6,000 கி.மீ. கடற்கரையில் இருந்து இமயமலையில் உள்ள மிக உயரமான சிகரங்கள் வரை வாக்காளர்களை கொண்ட நாடு இந்தியா. கிழக்கு, மேற்கு பகுதிகளில் பாலைவனங்களை கொண்டது. நாட்டில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.49 லட்சமாக உள்ளது. தவிர 1.80 லட்சம் வாக்காளர்கள் 80 வயதைக் கடந்தவர்கள். நாட்டில் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நெகி சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அப்போது அவருடைய வயது 106. இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர் கூட அவர் தபால் மூலம் வாக்களித்தார்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் புணேவில் 49.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. கடலோரப் பகுதி, மலைப் பகுதி, பாலைவனப் பகுதி அல்லது யாரும் எளிதில் சென்று வர முடியாத கடினமான பகுதிகளில் வசிப்பவர்கள் கூட தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். ஜனநாயக அமைப்பை அவர்கள் வலுப்படுத்தும் ஆர்வத்துடன் வாக்களிக்கும் போது, நகர்ப்புறங்களில் உள்ள சிலர் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
நகர்ப்புறத்தில் உள்ள அனைவரும் தேர்தலில் வாக்களித்து நாட்டை வலிமைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். 18 வயது நிரம்பிய இளைய தலைமுறையினர் ஆர்வமுடன், உற்சாகத்துடன் வாக்களிக்க முன்வர வேண்டும். உங்கள் வாக்குகளால் மட்டுமே பாரம்பரிய ஜனநாயகம் வலிமை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT