Published : 09 Nov 2022 08:28 AM
Last Updated : 09 Nov 2022 08:28 AM
புதுடெல்லி: கடந்த மார்ச்சில் உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலின் போது அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவோம் என பாஜக அறிவித்திருந்தது. இதையடுத்து உத்தராகண்டுடன் உத்தர பிரதேசத்திலும் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
தற்போது, இமாச்சலபிரதேசம், குஜராத் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என பாஜக அறிவித்துள்ளது. இதற்குமுன், கடந்த அக்.10-ல் மாநிலங்களவையின் சட்டத்துறை நிலைக்குழுவிலும் இதற்கான முயற்சியாக கருத்துகளை கேட்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன் மீது காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் இதுவரை தங்கள் கருத்தை கூறவில்லை.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், தனிச் சட்டங்களை சமூக மாற்றங்களுக்கு ஏற்றபடி சீர்திருத்த ஆதரவு அளித்துள்ளது.
இச்சூழலில், பொது சிவில் சட்டம் குறித்து காங்கிரஸ் தனது கருத்தை முதல்முறையாக நேற்று முன்தினம் வெளியிட்டது. இதுகுறித்து இக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் அனைத்து கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்பது அவசியம். இப்பிரச்சினையில் அனைவரிடமும் ஒருமித்த கருத்து வெளியானால், அதற்கு காங்கிரஸும் ஆதரவளிக்கும். பிராந்தியம் மற்றும் மாநில அளவில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முடியாது.
கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. இப்பிரச்சினையில் பொதுமக்கள் கண்களில் மண்ணை தூவ பாஜக முயற்சிக்கிறது.
எனவே, அனைத்து கட்சிகள் தரப்பில் பொது சிவில் சட்டத்துக்கான ஒத்துழைப்பு கிடைத்தால் அதை காங்கிரஸும் ஆதரிக்கும். அதிலும் ஒருமித்த கருத்து வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவது அவசியம். அதுவரை தேர்தல் நேரங்களில் பாஜக வெளியிடும் முட்டாள்தனமான அறிவிப்புகள் மீது நாங்கள் கருத்து கூறவேண்டிய அவசியமில்லை. தேர்தலில் தோல்வி பயம் வரும்போது பாஜகவுக்கு மதங்களும், பொது சிவில் சட்டமும் நினைவுக்கு வருவது வழக்கமாகிவிட்டது” என்றார்.
மாநிலங்களவை சட்டத்துறை நிலைக்குழுவின் அறிவிப்பு அடிப்படையில் தமிழக அரசு முன்வந்து ஒரு குழு அமைத்துள்ளது. இதற்கு பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனினும், தமிழகத்தில் திமுக கூட்டணியிலுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஹைதராபாத் எம்.பி.யான அசதுத்தீன் ஒவைசியின் கட்சி மட்டும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் வெளியிட்டுள்ள கருத்து முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT