Published : 10 Jul 2014 08:38 AM
Last Updated : 10 Jul 2014 08:38 AM
பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அமித் ஷா, சர்ச்சைகளில் சிக்குவதில் பெயர் போனவராகக் கருதப்படுகிறார்.
குஜராத்தில் சுட்டுக் கொல்லப் பட்ட சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோரின் போலி என்கவுண்டர் வழக்கு 2007-ல் வெளிச்சத்துக்கு வந்தது. இதில் முதன்முறையாக சிக்கி சர்ச்சைக்குள்ளானர் அமித் ஷா.
இவை எல்லாம் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் அனுமதியின் பேரில் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 2010-ல் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் சிறையில் இருந்த இவருக்கு சுமார் இரண்டு வருடங்கள் குஜராத்தில் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. இது, குஜராத்தின் கடந்த சட்டசபை தேர்தலுக்கு சற்று முன்னதாக விலக்கப்பட்டு அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பிறகு மக்களவைத் தேர்தலில் உபியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இவர், முசாபர் நகரில் மதவாதத்தை தூண்டும் வகையில் பேசியதால் தேர்தல் ஆணையம் அவருக்கு தடை விதித்தது. இதற்கு ஷா, அதை இனி செய்வதில்லை என உறுதி அளித்த பின் தடை விலக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் இணைப்பு
மும்பையில் 1964-ல் பிறந்த அமித் ஷா, சிறு வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கில் (ஆர்.எஸ்.எஸ்) இணைந்து பணியாற்றினார். இவர் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சாரகராக இருந்த நரேந்திர மோடியை 1982-ல் முதன்முறையாக சந்தித்தார். அப்போதே மோடியின் நட்பை பெற்று விட்டதாகக் கருதப்படும் ஷா, அடுத்த வருடமே பாஜகவின் இளைஞர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத்தில் இணைந்தார். 1985-ல் கட்சியில் இணைந்த மோடியுடன் அடுத்த வருடமே வந்து சேர்ந்து கொண்டார் ஷா.
குஜராத் சட்டசபை எம்.எல்.ஏ
குஜராத்தில் முதன்முறையாக 1995-ல் பாஜக அரசு அமைந்தது. முதல்வராக கேசுபாய் பட்டேல் இருந்தார். அப்போது, மோடியுடன் இணைந்து ஷா, குஜராத்தில் பாஜகவின் தளத்தை விரிவுபடுத்தினார். அதன் விளைவாக அம் மாநிலத்தின் சர்கேஜ் சட்டசபை தொகுதியில் 34 வயதில் முதன்முறையாக 1997-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு தொடர்ந்து நான்குமுறை (1997, 1998, 2002 மற்றும் 2007) எம்.எல்.ஏவாக இருந்தார். பிறகு தொகுதி மாறி 2012-ல் நாரண்புராவில் எம்.எல்.ஏ.வானார். இதில், மோடியின் நெருக்கம் காரணமாக அவரது அமைச்சரவையில் உள்துறை உட்பட 12 முக்கிய துறைகளுக்கு அமைச்சரானார் ஷா.
ராஜ்யசபை மெஜாரிட்டி
பாஜகவிற்கு ராஜ்யசபையில் இல்லாத மெஜாரிட்டியை அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் டெல்லி மாநில சட்டசபை தேர்தலின் வெற்றியில் பெற முயற்சிக்கப்படுகிறது. இதை மனதில் கொண்டு அமித் ஷாவிற்கு கட்சி தேசிய தலைவர் பதவி அளித்திருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த பதவிக்கு ஷாவின் பெயர் முதன் முதலில் பேசப்பட்டபோது, பிரதமர் மற்றும் தலைவர் என இருவருமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என சர்ச்சை எழுந்தது. இவருக்கு பதிலாக மற்றொரு பொதுச்செயலாளரான ஹரியாணாவின் ஜே.பி.நட்டாவின் பெயரும் ஆலோசிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் ஒப்புதல்
மக்களவைத் தேர்தலில் பிஹாரிலும் வெற்றிக் கூட்டணி அமைத்து பாஜகவின் ஆட்சி அமைய காரணமாக ஷா இருந்தார் எனக் கூறப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற இடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உபி, பிஹார் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை ஆகும். இதனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் அளித்த ஒப்புதலால் ஷாவிற்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
’சாஹேப்’ என மிகவும் மதிப்புடன் குஜராத்தில் அழைக்கப் படும் ஷா, பி.எஸ்.சி. பயோ கெமிஸ்ட்ரி பயின்று தன் தந்தையுடன் சில வருடங்கள் பி.வி.சி. பைப் வியாபாரத்தில் ஈடுபட்டவர். ஷாவிற்கு கடந்த வாரம் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி.யின் ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT