Published : 09 Nov 2022 05:18 AM
Last Updated : 09 Nov 2022 05:18 AM
பெங்களூரு: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி வாய்ந்த கற்கள் கர்நாடகாவில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கர்நாடக மாநிலம் சிக்கப் பள்ளாப்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கற்கள் மிகவும் உறுதியானவை என்பதால் அவற்றுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்புஉள்ளது. இதனால் இந்த கற்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து கல் குவாரி ஒப்பந்ததாரர் முனிராஜூ கூறியதாவது:
சிக்கப்பள்ளாப்பூரில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் நாட்டிலேயே மிகவும் உறுதியானவை. இந்த கற்கள் நிலநடுக்கத்தையும் தாங்கும் சக்தி படைத்தவை. இதனால் பெரும்பாலான முக்கிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு இங்கிருந்து கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அந்த வகையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் அஸ்திவாரப் பணிகளுக்கு பயன்படுத்த இந்த கற்கள் தேர்வாகியுள்ளன. இதற்காக சிக்கப்பள்ளாப்பூர் கற்கள் 1500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் 24 மணி நேரத்துக்கும் மேலாக உறைபனி வெப்பநிலையில் வைத்தும் சோதிக்கப்பட்டது.
இதில் கற்கள் தேர்வானதால் ராமர் கோயில் அஸ்திவாரப் பணிகளுக்கு தேவையான கற்களை விநியோகம் செய்ய 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ராமர் கோயில் வளாக அஸ்திவாரத்தின் அடித்தளம் 40 அடி ஆழத்தில் அமைய இருக்கிறது. இதற்கு 5 அடி நீளம், 3 அடி தடிமன், 2.75 அடி அகலம் கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெங்களூரு பல்கலைக்கழக புவியியல் துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் மஹ்பலேஷ்வர் கூறுகையில், ‘‘சிக்கப்பள்ளாப்பூரில் உள்ள பாறைகள் 2,500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை. இவை மிகவும் உறுதியான கிரானைட் வகையை சேர்ந்தவை. எனவே நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவை'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT