Published : 08 Nov 2022 02:43 PM
Last Updated : 08 Nov 2022 02:43 PM
அகமதாபாத்: "135 பேருக்கும் அதிகமானோர் பலியான மோர்பி பாலம் விபத்துக்கு இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரியும் மன்னிப்பு கேட்கவில்லை, பொறுப்பேற்கவும் இல்லை. மோர்பி நகரத்தில் நடந்த தொங்கு பாலம் விபத்து குஜராத்தின் நற்பெயருக்கான களங்கம்" என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக முக்கிய அரசியல் கட்சிகள் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றன. கட்சிகளின் மூத்த தலைவர்கள் தங்களின் கட்சிகளுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான ப. சிதம்பரம் இன்று குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், " எனக்குத் தெரிந்த வரையில் குஜராத்தில் நடந்துள்ள மாபெரும் சோகமான நிகழ்வுக்கு இதுவரை எந்த ஒரு அரசு அதிகாரியும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கவும் இல்லை, பதவி விலகவும் இல்லை. மோர்பி பாலம் விபத்து குஜராத்தின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கம். வெளிநாடுகளில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால், அங்குள்ள அதிகாரிகள் முதல் வேலையாக பதவி விலகி இருப்பார்கள்.இங்குள்ள அரசாங்கம் வர இருக்கும் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புவதால் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. இந்த விபத்துக்கு தாங்கள் பொறுப்பேற்க தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.
எந்ததெந்த மாநிலங்களில் மக்கள் அரசாங்கத்தை தோற்கடிப்பவர்களாக இருக்கிறார்களோ அங்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் நிலையில் இருக்கும். குஜராத் மக்களை நான் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்றுதான் இந்த அரசாங்கத்தை மாற்றிவிட்டு காங்கிரஸூக்கு வாய்ப்பு அளியுங்கள்." இவ்வாறு அவர் பேசினார். மேலும் குஜாரத் மாநிலத்தை இம்மாநில முதல்வர் ஆட்சி செய்யவில்லை. குஜராத் டெல்லியில் இருப்பவர்களால் ஆளப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரத்திடம், மத்திய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறதா என்று கேட்டபோது, "அவைகள் மத்திய அரசின் கைக்கூலிகளாக செயல்படுகின்றன. அவர்கள் விசாரணை நடத்தியவர்களில் 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சியைத் சேர்ந்தவர்களே" என்றார். குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதியை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அடுத்த ம மாதம், 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8 தேதி நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT