Published : 07 Nov 2022 06:00 AM
Last Updated : 07 Nov 2022 06:00 AM
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் குனோ தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 சிவிங்கி புலிகள் (சீட்டா) வனப்பகுதியில் நேற்று திறந்துவிடப்பட்டன.
சிறுத்தையில் பல வகைகள் உள்ளன. இதில் சீட்டா வகைகள் சிவிங்கி புலிகள் என்று அழைக்கப்படுகின்றன. கடந்த 1950-க்குப் பிறகு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இவை தென்படவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியின் முயற்சியால் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் (5 பெண்) மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த 8 சிவிங்கி புலிகளையும் பிரதமர் மோடி, தனது பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி குனோ தேசிய பூங்காவில் ஒப்படைத்தார். எனினும், பூங்கா நிர்வாகத்தினர் அந்த சிவிங்கி புலிகளை சிறிய பகுதியில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். வேறு கண்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதால், உடல்நிலையை கண்காணிக்கவும் இங்குள்ள உணவு, சுற்றுச்சூழலுக்கு பழக வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
தனிமைப்படுத்தல் காலம் முடிந்த நிலையில், 8 சிவிங்கி புலிகளுக்கும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவை ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்ததால், மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் தடையில்லா சான்று பெற்றது.
ஆண் சிவிங்கி புலிகள்
இதையடுத்து, 2 ஆண் சிவிங்கி புலிகள் குனோ தேசிய பூங்காவின் பரந்த வனப்பகுதியில் நேற்று திறந்து விடப்பட்டதாக குனோ வனவிலங்கு வட்டத்தின் மண்டல வன அதிகாரி பிரகாஷ் குமார் வர்மா தெரிவித்தார். மேலும் மீதமுள்ள 6 சிவிங்கி புலிகளும் படிப்படியாக பரந்த வனப் பகுதியில் விரைவில் திறந்துவிடப்படும் என அவர் தெரிவித்தார்
சிவிங்கி புலிகள் சுதந்திரமாக வனப்பகுதிக்குள் செல்வது போன்ற வீடியோவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன், “நல்ல செய்தி. தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு 2 சிவிங்கி புலிகள் பரந்த வனப்பகுதியில் திறந்துவிடப்பட்டுள்ளன. மற்ற சிவிங்கி புலிகளும் விரைவில் சுதந்திரமாக திரிய விடப்படும். அனைத்து சிவிங்கி புலிகளும் ஆரோக்கியமாக, உற்சாகமாக இருப்பதாக கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
அனைத்து சிவிங்கி புலிகளுக்கும் ரேடியோ காலர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் செயல்பாடுகள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும். தவிர, ஒவ்வொரு சிவிங்கி புலியையும் 24 மணி நேரமும் கண்காணிக்க தனித்தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment