Published : 07 Nov 2022 05:35 AM
Last Updated : 07 Nov 2022 05:35 AM
தெலங்கானா, பிஹார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஹரியாணா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சிவசேனா உத்தவ் அணி ஆகியவை தலா ஒரு தொகுதியைக் கைப்பற்றின.
தெலங்கானாவின் முனுகோடு, பிஹாரின் கோபால்கன்ச், மொகாமா, உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, ஒடிசாவின் தாம்நகர், ஹரியாணாவின் ஆதம்பூர் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பாஜகவிடம் 3, காங்கிரஸிடம் 2, சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் (ஆர்ஜேடி) தலா ஒரு தொகுதி இருந்தன. இந்த தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
தெலங்கானாவின் முனுகோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். இடைத்தேர்தலில் அவர் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். அவருக்கும், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) வேட்பாளர் பிரபாகர் ரெட்டிக்கும் கடும் போட்டி நிலவியது. எனினும், டிஆர்எஸ் வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 96,826 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டிக்கு 86,709 வாக்குகள் கிடைத்தன.
பிஹாரின் கோபால்கன்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ சுபாஷ்சிங் மறைவால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக வேட்பாளர் குஸும் தேவி 70,032 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் மோகன் பிரசாத் குப்தாவுக்கு 68,243 வாக்குகள் கிடைத்தன.
ஓவைசியால் தோல்வி
அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் அப்துல் சலாம் 12,212 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் இந்திரா யாதவ் 8,853 வாக்குகளையும் பெற்றனர். ஓவைசி கட்சி வேட்பாளர் வாக்குகளைப் பிரித்ததால், ராஷ்டிரிய ஜனதா தளம் தோல்வியடைந்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிஹாரின் மொகாமா தொகுதி ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏ ஆனந்த் சிங் குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, பதவியை இழந்தார். அவரது மனைவி நீலம் தேவி, ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளராக மொகாமா தொகுதியில் போட்டியிட்டார். அவர் 79,646 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சோனம் தேவிக்கு 62,939 வாக்குகள் கிடைத்தன.
உத்தர பிரதேசத்தின் கோலாகோக்கராநாத் தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி மறைவால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அவரது மகன் அமன் கிரி பாஜக சார்பில் போட்டியிட்டு, 1,24,810 வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றார். சமாஜ்வாதி வேட்பாளர் வினய் திவாரி 90,512 வாக்குகளைப் பெற்றார்.
மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதி சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி) எம்எல்ஏ ரமேஷ் லட்கி உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ரமேஷின் மனைவி ருத்துஜாவை எதிர்த்து, பாஜக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், ருத்துஜா ரமேஷ் 66,247 வாக்குகளைப் பெற்று எளிதாக வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்து நோட்டாவுக்கு 12,776 வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஒடிசாவின் தாம்நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ விஷ்ணு சரண் சேத்தியின் மறைவால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக வேட்பாளர் சூர்யவன்ஷி சூரஜ் 75,239 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள வேட்பாளர் அபந்தி தாஸ் தோல்வியைத் தழுவினார். அவருக்கு 66,414 வாக்குகள் கிடைத்தன.
காங்கிரஸில் இருந்து பாஜக..
ஹரியாணாவின் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் அண்மையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட குல்தீப் பிஷ்னோயின் மகன் பாவ்யா பிஷ்னோய் 67,376 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷுக்கு 51,662 வாக்குகள் கிடைத்தன. ஆம் ஆத்மி வேட்பாளர் சதீந்தர் சிங் 3,413 வாக்குகளைப் பெற்றார்.
மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றதில், 4 தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. டிஆர்எஸ், ஆர்ஜேடி, சிவசேனா உத்தவ் அணி தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT