Published : 06 Nov 2022 06:10 AM
Last Updated : 06 Nov 2022 06:10 AM
புதுடெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த 1995-ம் ஆண்டு முதல் அங்கு பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போது 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தவிர ஆம் ஆத்மியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஏபிபி நியூஸ், சி - வோட்டர் இணைந்து குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளன. அதன் விவரம் வருமாறு:
இந்த தேர்தலில் பாஜகவுக்கு 45.4 % வாக்குகள் கிடைக்கும். இது கடந்த தேர்தலைவிட 3.7% குறைவாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு 29.1% வாக்குகள் மட்டுமே கிடைக்கும். குஜராத் தேர்தலில் புதிதாக களமிறங்கும் ஆம் ஆத்மிக்கு 20.2 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
இதன்படி பாஜக 131 முதல் 139 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸுக்கு 31 முதல் 39 இடங்களும் ஆம் ஆத்மிக்கு 7 முதல் 15 இடங்களும் கிடைக்கும். இவ்வாறு அதில் க;றப்பட்டுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இண்டியா டிவி, மேட்ரிஸ் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன.
அதில், ‘‘குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 51.3 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 37.2%,ஆம் ஆத்மிக்கு 7.2% வாக்குகள் கிடைக்கும். இதன்படி பாஜக 119, காங்கிரஸ் 59, ஆம் ஆத்மி 3 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
ஏபிபி நியூஸ், சி - வோட்டர் கருத்துக் கணிப்பின்படி பாஜக 37 முதல் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 21 முதல் 29 தொகுதிகள் கிடைக்கும். ஆம் ஆத்மிக்கு ஓரிடம்கூட கிடைக்காது.
இண்டியா டிவி, மேட்ரிஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், ஆளும் பாஜகவுக்கு 41, காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் கிடைக்கும். ஆம் ஆத்மி உள்ளிட்ட இதர கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பாஜகவுக்கு 131-139, காங்கிரஸுக்கு 31-39, ஆம் ஆத்மிக்கு 7-15 இடங்களும் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT