Published : 05 Nov 2022 12:42 PM
Last Updated : 05 Nov 2022 12:42 PM
மோர்பி: குஜராத்தின் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலத்தை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டது அம்பலமாகி உள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாலம் கடந்த 1880-ஆம் ஆண்டு அதாவது, 140 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பாலம் பழுதடைந்ததை அடுத்து, கடந்த 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மோர்பி நகராட்சி சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒரேவா குழுத்தின் (Oreva Group) அஜந்தா மேனுஃபேக்சரிங் (Ajanta Manufacturing Private Limited) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், பாலத்தை 15 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
பாலத்தை புனரமைப்பதற்கானப் பணிகள் முடிவடைந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, குஜராத்தில் புத்தாண்டான கடந்த 26-ம் தேதி பாலம் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 30-ம் தேதி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சத்தை மட்டுமே அந்த நிறுவனம் செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT