Published : 05 Nov 2022 10:45 AM
Last Updated : 05 Nov 2022 10:45 AM

அடுத்த கல்வியாண்டு முதல் இந்தியில் மருத்துவப் படிப்பு: உத்தராகண்ட் அமைச்சர்

பிரதிநிதித்துவப்படம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்தி மொழியிலும் (ஆங்கில மொழியிலும் பயிற்றுவிக்கப்படும் ) மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கப்படும் என்று அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், "மத்திய அரசு இந்தி மொழிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் பயிற்றுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சிஎம்எஸ் ராவத் தலைமையில் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தியில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான பாடத்திட்டங்களை இந்தக் குழு நன்றாக ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும். இதையடுத்து, அந்த பாடத்திட்டத்தை ஏற்பதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, அடுத்த கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் இந்தியில் மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படும்" என தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தியில் பயிற்றுவிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவப் படிப்புகளுக்கான இந்தி பாட நூல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த அக்.16-ம் தேதி வெளியிட்டார். உத்தராகண்டில் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகள் இந்தியில் வழங்கப்படுமானால், இந்தியில் மருத்துவப் படிப்புகளை வழங்கும் இரண்டாவது மாநிலம் என்ற பெயரை உத்தராகண்ட் பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x