Published : 05 Nov 2022 06:12 AM
Last Updated : 05 Nov 2022 06:12 AM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் பெண் போலீஸ் எஸ்.பி.யாக பணியாற்றுபவர் சாரு நிகம். ஐபிஎஸ் அதிகாரி. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் மாறுவேடத்தில், ஆள் அரவமற்ற சாலைப் பகுதிக்குச் சென்றார். முகக் கவசம், கருப்பு கண்ணாடி, துப்பட்டாவால் தனது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்ட சாரு நிகம், அங்கிருந்தபடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.
அப்போது தன் பெயர் சரிதா சவுகான் என்றும், தன்னிடம் 2 நபர்கள் பணத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடியதாக பதற்றமாக பேசினார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீஸார், அவரிடம் பயப்படாமல் இருக்கும்படியும், 5 நிமிடங்களில் அவர் இருக்கும் இடத்துக்கு போலீஸார் வருவார்கள் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் இருந்த இடத்துக்கு 3 போலீஸார் விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரிடம் புகாரை பெற்றுக் கொண்ட பின்னர்தான், அந்த பெண், தங்களுடைய உயர் போலீஸ் அதிகாரி என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. இதுகுறித்து சாரு நிகம் கூறும்போது, ‘‘பொதுமக்கள் புகார் கொடுத்தால் போலீஸார் எவ்விதம் செயல்படுகின்றனர் என்பதை மாறுவேடம் போட்டு கண்காணித்தேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT