Published : 03 Nov 2016 03:08 PM
Last Updated : 03 Nov 2016 03:08 PM
போபாலில் நடந்தது என்கவுன்ட்டரே அல்ல என்று, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிமி இயக்கத்தைச் சேர்ந்தவரின் உறவினர்கள் கூறினர்.
போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய 8 பேரும் ஒரே இடத்தில் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி என நாடு முழுவதும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட அப்துல் மஜீத் என்பவரின் உறவினர்கள், என்கவுன்ட்டர் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அப்துல் மஜீத்தின் சகோதரி சுலேகா பீ 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழிடம் கூறும்போது, ''சிமி என்கவுன்ட்டரில் உயிரிழந்தவர்களில் ஒருவரான அப்துல் மஜீத் என்னுடைய சகோதரர். அவரை சமீபத்தில்தான் ஒரு பண்டிகையில் சந்தித்தேன். ஆனால், இப்போது திடீரென அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
மஜீத் என்னிடமும், அவர் மனைவியிடமும் சில அதிகாரிகள் போலி என்கவுன்ட்டர் மூலம் அவரைக் கொலை செய்ய உள்ளதாக சொல்லிக்கொண்டே இருப்பார். கடைசியில் அது உண்மையாகிவிட்டது. நாங்கள் யாரும் போலீஸார் சொல்லும் கதையை நம்பத் தயாராக இல்லை'' என்றார்.
மஜீத்தின் மைத்துனர் ஷபீர் ஹுசேன் கூறும்போது, ''ஜனவரி 2013-ல், வெடிபொருட்கள் வைத்திருந்தார் என்று கூறி காவல்துறை, அப்துல் மஜீத்தை தேடிக்கொண்டிருந்தது. போலீஸ் அவரைக் கைது செய்யவில்லை. அவராகவே நீதிமன்றத்தில் சரணடைந்தார். குற்றம் சாட்டப்பட்டு அவராகவே சரணடைந்தவர், தப்பிச்செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை'' என்றார்.
மேலும் சில சந்தேகங்களை எழுப்பிய மஜீத்தின் சகோதரர், ''நாங்கள் எப்போதெல்லாம் சிறைச்சாலைக்குச் செல்கிறோமோ, அப்போதெல்லாம் சிசிடிவி கேமராக்கள் எங்களை மொய்க்கும். சுவர்கள், திறந்தவெளிகள், புதர்கள் என எல்லா இடங்களிலும் இருக்கும் கேமராக்களைப் பற்றிச் சிறை அதிகாரி கூறுவார். ஆனால், அவர்கள் தப்பிச்சென்றபோது, திடீரென எப்படி கேமராக்கள் வேலை செய்வதை நிறுத்தின என்று புரியவில்லை'' என்றார்.
தனக்குள்ள சந்தேகங்கள் குறித்து மேலும் பேசிய சுலேகா, ''சிறைக்குச் சென்ற பிறகு மஜீத், மார்பு வரை தொங்கும் தாடியை வைத்திருந்தார். கடந்த மாதம் அவரைப் பார்த்தபோது கூட, அது அப்படியேதான் இருந்தது. தப்பித்துச் சென்ற இரவில் அவர் சவரம் செய்துகொண்டார் என்று காவல்துறை எங்களை நம்ப வைக்கப் பார்க்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.
"சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட மஜீத், தன்னுடைய சொந்த ஊரான மஹித்பூரில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.
மஜீத் சிறைக்குச் சென்றதால் எல்லோரின் பார்வையும், எங்கள் குடும்பத்தின் மீது தீவிரவாத சந்தேகத்துடனே இருந்தது. அதனால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். இப்போது எங்கள் முதலமைச்சர் கூட, கொல்லப்பட்டவர்களை தீவிரவாதிகள் என்றே குறிப்பிடுகிறார்'' என்றார் மஜீத்தின் அண்ணன் மகன் சர்ஃபராஸ்.
மஜீத்தின் உடல் அவரின் சொந்த ஊருக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது. அவரின் இறுதிச்சடங்கில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment