Published : 05 Nov 2022 01:14 AM
Last Updated : 05 Nov 2022 01:14 AM

அன்று பகவந்த் மான்... இன்று இசுதான் காத்வி...- ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்களும் சர்ச்சையும்

இசுதான் காத்வி மற்றும் பகவந்த் மான்

பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து அக்கட்சி கருத்து கேட்பு நடத்தியது. இதில் பகவந்த் மானுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் வெற்றியை அடுத்து அவர் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், அதே அணுகுமுறையை குஜராத்திலும் ஆம் ஆத்மி தொடங்கி இருக்கிறது. ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் வேட்பாளருக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் இசுதான் காத்வி 73 சதவீத வாக்குகளை பெற்றதால், வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பஞ்சாப்பில் பின்பற்றிய அதே அணுகுமுறையை குஜராத்திலும் பின்பற்றி வேட்பாளரை அறிவித்துள்ளது. அதே அணுகுமுறையை போல, பகவந்த் மான் எதிர்கொண்ட அதே சர்ச்சையையும் இசுதான் காத்வி எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறார்.

விடாத 'மது சர்ச்சை': ஆம், மது குடித்த சர்ச்சையே அது. பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது பகவந்த் மான் மீது ஏராளமான சர்ச்சைகள் வெளிவந்தன. ஆனால் அவற்றில் முக்கியமாக மதுப்பழக்கம் அவரை நிறைய கேலிகளை சர்ச்சைகளை சந்திக்க வைத்தது. பகவந்த் மானின் 10 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், அவர் மீது சொல்லப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டே அவர் மது அருந்துவார் என்பதுதான்.

மது குடித்துவிட்டு நாடாளுமன்றத்துக்கு வந்ததாக அவரை குற்றம்சாட்ட நிகழ்வுகளும், ஒருமுறை பகவந்த் பேசிக்கொண்டிருந்தபோது பாஜக எம்பி ஒருவர் அவரின் அருகில் சென்று மது குடித்த வாடை அடிக்கிறதா என்று முகர்ந்து பார்த்த சம்பவங்களும் அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்தின.

மேலும் 2015ல் குரு கிரந்த் சாஹிப் அவமானப்படுத்தப்பட்டதற்காக நடந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தின்போதும், 2016ல் பாடகர் மன்மீத் அலிஷேரின் இறுதிச் சடங்கு நிகழ்வு என பல நிகழ்வுகளில் பகவந்த் மது அருந்தியதாக குற்றச்சாட்டுகளும், அவர் தள்ளாடி நடந்து செல்லும் வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையாகின. தொடர்ந்து 2019ல் ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து, "இனி மது அருந்த மாட்டேன். பஞ்சாப் மக்களுக்காக உழைக்க இனி எனது நேரத்தை ஒதுக்குவேன்" என்று தனது தாயாரிடம் சத்தியம் செய்தார் பகவந்த்.

பகவந்த் மானைப் போலவே, குஜராத் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இசுதான் காத்விமீது மது குடித்த சர்ச்சை உள்ளது. 2021, டிசம்பர் 20ம் தேதி காந்தி நகரில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இசுதான் காத்வி கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மது குடித்து இருந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

காத்வி குடிபோதையில் சிக்கியது எப்படி?: கிளார்க் வேலைக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பாஜகவின் மாநில தலைமையகமான ‘கமலம்’ மாளிகைக்கு எதிராக ஆம் ஆத்மி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக காத்வி குடிபோதையில் வந்ததாகச் சொல்லப்பட்டன. இந்தப் போராட்டம் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதலாக மாறியபோது குடிபோதையில் இருந்த காத்வி பாஜக பெண் தொண்டர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக புகார் கொடுக்கவும்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காத்வி உட்பட 20 ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது கிரிமினல் அத்துமீறல், பாலியல் வன்கொடுமை, சட்டவிரோதமாக கூட்டம் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. உடனடியாக கைதும் செய்யப்பட்டார். கைதுக்கு பிறகு நடந்த மருத்துவ பரிசோதனையில் காத்வியின் இரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த காத்வி, தான் மது அருந்தியதில்லை என்றும் தான் ஒரு டீட்டோடலர் என்றும் கூறினார். மேலும், அரசியல் காரணங்களுக்காக பாஜக அரசு மருத்துவ அறிக்கையில் பொய்களை சொல்லியுள்ளது என்றும் குற்றம் சுமத்தினார். மது அருந்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் காத்வி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லிக்கு பிறகு ஆம் ஆத்மி வலுவாக உள்ள இரு மாநிலங்களில் ஒன்று பஞ்சாப், மற்றொன்று குஜராத். பஞ்சாப்பில் பின்பற்றிய அதே அணுகுமுறையை குஜராத்திலும் பின்பற்றி வேட்பாளரை அறிவித்துள்ளது ஆம் ஆத்மி. பஞ்சாப்பில் தன் மீதான மது சர்ச்சைகளை தாண்டி பகவந்த் வெற்றிபெற்றார். எனினும், மதுவிலக்கு உள்ள குஜராத் மாநிலத்தில் காத்வி மது சர்ச்சையில் சிக்கியது அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பது வரவிருக்கும் தேர்தலிலேயே தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x