Published : 04 Nov 2022 04:52 PM
Last Updated : 04 Nov 2022 04:52 PM
புதுடெல்லி: குஜராத்தில் மக்கள் ஆதரவு பாஜகவுக்கே அதிகம் இருப்பது லோக்நிதி - சி.எஸ்.டி.எஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்பதும் தெரியவந்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று (நவ.3) வெளியிட்டது. இந்நிலையில், குஜராத்தில் அரசியல் களம் எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பாக லோக்நிதி - வளர்ந்து வரும் சமூகங்களின் ஆய்வு மையம் (சி.எஸ்.டி.எஸ்) இரண்டும் இணைந்து குஜராத்தில் கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளன. அந்த முடிவுகள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் நாள்தோறும் வெளிவந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று வெளியிட்டுள்ள முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
மும்முனைப் போட்டி: குஜராத்தில் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதுவரை பாஜக - காங்கிரஸ் என இருமுனைப் போட்டியே இருந்து வந்த குஜராத்தில் முதல்முறையாக ஆம் ஆத்மி இவ்விரு கட்சிகளுக்கும் கடும் போட்டியை அளித்து வருகிறது. மூன்று கட்சிகளுக்கும் உள்ள மக்கள் ஆதரவு வாக்குகள் குறித்த கருத்துக்கணிப்பில், பாஜக கடந்த 2017-ல் பெற்ற 49.1 சதவீத வாக்குகளைவிட 2.1 வாக்குகள் குறைந்து 47 சதவீத வாக்குகளைக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், கடந்த 2017 தேர்தலின்போது 41.4 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 21 சதவீத மக்களின் ஆதரவை மட்டுமே பெற்றிருக்கிறது. காங்கிரஸ் ஆதரவு வாக்குகள் அதிக அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றுள்ளன. அக்கட்சி 22 சதவீத மக்களின் ஆதரவை பெற்று, பாஜகவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 20.4 சதவீத மக்களின் ஆதரவை இழந்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாஜகவுக்கு கிராமப்புறங்களில் வலுவான ஆதரவு இருப்பதும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் ஆதரவு அதிகம் இருப்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் குறைவான வயது உள்ளவர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும், அதிக வயது உள்ளவர்கள் பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏழை மற்றம் நடுத்தர வாக்காளர்களில் 4-ல் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கும், 4-ல் ஒருவரின் ஆதரவு காங்கிரசுக்கும் இருக்கிறது.
குஜராத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட சமூகங்களில் ஒன்றான பட்டிதார் சமூகத்தின் ஆதரவு பாஜகவுக்கே அதிகம் இருக்கிறது. கடந்த 2017 தேர்தலின்போது காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த பட்டிதார் சமூக மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இம்முறை பாஜகவுக்கு ஆதரவாக மாறி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை பாஜகவுக்கே ஆதரவு அதிகம் இருக்கிறது. இதேபோல் பழங்குடி மக்களின் ஆதரவும் பாஜகவுக்கே அதிகம் உள்ளது. அதேநேரத்தில், தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே அதிகம் இருக்கிறது. இஸ்லாமியர்களில் 50 சதவீத மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களில் 10-ல் 3 பேரின் ஆதரவை ஆம் ஆத்மியும், 10-ல் ஒருவரின் ஆதரவை பாஜகவும் பெற்றுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாஜக ஆட்சியில் குஜராத் வளர்ச்சி பெற்று வருவதாகவும், வளர்ச்சித் திட்டங்களை அக்கட்சி திறம்பட மேற்கொள்வதாகவும் பெரும்பாலான குஜராத் மக்கள் கருதுகின்றனர். பாஜகவின் வளர்ச்சி அரசியலுக்காக அக்கட்சியை ஆதரிப்பதாக 27 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், மாநிலத்தில் வளர்ச்சி இல்லை என 14 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குஜராத்தில் 3-வது கட்சிக்கான தேவை இருப்பதாக 61 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே, ஆம் ஆத்மி 22 சதவீத மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. எனினும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அளவுக்கு தேர்தல் வாய்ப்பு ஆம் ஆத்மிக்கு இருக்காது என 31 சதவிதம் பேரும், இருக்கும் என 34 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT