Published : 04 Nov 2022 04:00 AM
Last Updated : 04 Nov 2022 04:00 AM
புதுடெல்லி: குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குஜராத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொத்தம் 4.91 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 51,782 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
முதல்முறையாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சிறப்பு பார்வையாளர் நியமிக்கப்பட்டு, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்வார். டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னத்துடன், அவர்களின் புகைப்படமும் ஒட்டப்படும்.
குஜராத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. தேர்தலின்போது வதந்தி பரவுவதை தடுக்க, விதிகளை மீறி சமூக வலைதளங்களில் கருத்துகள், புகைப்படம், வீடியோ பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மோர்பி நகரில் நேரிட்ட தொங்கு பாலம் விபத்து மற்றும் நிர்வாகக் காரணங்களால் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குஜராத்தில் 1995 முதல் பாஜக ஆட்சிபுரிந்து வருகிறது. 2017 தேர்தலில் 6-வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. தற்போது 7-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
2017 தேர்தலில் பாஜக 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 79 தொகுதிகளிலும் வென்றன. தற்போதைய தேர்தலில் பாஜக, காங்கிரஸுடன், ஆம் ஆத்மியும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT