Published : 03 Nov 2022 05:23 PM
Last Updated : 03 Nov 2022 05:23 PM
புதுடெல்லி: ஊழல்வாதிகள் என நிரூபிக்கப்பட்ட பிறகும், அத்தகையவர்கள் புகழப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஊழல் ஒரு தீமை. அதில் இருந்து நாடு விலகி இருக்க வேண்டும். போதிய வசதிகள் இல்லாதது, அரசாங்கத்தின் தேவையற்ற அழுத்தம் எனும் இரண்டும்தான் ஊழலுக்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த பற்றாக்குறையையம் அழுத்தத்தையும் போக்க கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப இது முயற்சிக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெளிப்படுத்துவதைப் போல் அரசின் ஒவ்வொரு துறையும் ஊழலுக்கு எதிராக தைரியத்துடன் செயல்பட வேண்டும். வளர்ந்த இந்தியாவுக்கு. நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் மிகவும் முக்கியம். அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறது. முந்தைய அரசாங்கங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்ததோடு, மக்களை நம்பவும் தவறிவிட்டன.
ஊழல், சுரண்டல், வளங்கள் மீதான கட்டுப்பாடு ஆகியவை துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு அதிக வலிமையைப் பெற்றன. இது நமது நாட்டின் நான்கு தலைமுறையினரைக் கடுமையாகப் பாதித்துவிட்டது. நாடு சுதந்திரம் அடைந்த இந்த 75ம் ஆண்டில், பல தசாப்தங்களாக நிலவி வந்த இவற்றை நாம் முழுமையாக மாற்ற வேண்டும். தொழில்நுட்பம் மூலம் ஊழல் ஒழிப்பை சாத்தியப்படுத்த முடியும். பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பத்தை இணைத்ததன் காரணமாக, கோடிக்கணக்கான போலி பயனாளிகள் நீக்ககப்பட்டனர். இதன் மூலம் ரூ. 2 லட்சம் கோடி தவறானவர்களின் கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பொருட்களை அதிகம் நம்பியிருப்பது ஊழலுக்கு முக்கிய காரணம். தற்போது தற்சார்பு இந்தியா எனும் இலக்கை நோக்கி நாடு வேகமாக பயணித்து வருகிறது. பாதுகாப்பு துறையில் தற்சார்புக்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, துப்பாக்கிகள் முதல் போர் விமானங்கள் வரை பலவற்றை நாமே தயாரிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதன்மூலம், பாதுகாப்புத்துறையில் மோசடிக்கான வாய்ப்புகள் முடிவுக்கு வருகின்றன.
ஊழலைக் கண்காணிக்கும் பணியில் சாமானிய குடிமக்களைக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். ஊழல்வாதிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை எந்தச் சூழலிலும் காப்பாற்றக் கூடாது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஊழல்வாதிகள் யாரும் அரசியல் - சமூக ஆதரவைப் பெறக்கூடாது. ஊழல்வாதிகள் ஒவ்வொருவரையும் சமூகம் சிறையில் தள்ள வேண்டும். ஊழல்வாதிகள் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும், ஊழல்வாதிகள் பலமுறை புகழப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இது நாட்டுக்கு நல்லதல்ல. அர்ப்பணிப்புடன் கடமைகளை நிறைவேற்ற அனைவரும் சத்தியத்தின் பாதையில் நடக்க வேண்டும்” என்றார் பிரதமர் மோடி.
முன்னதாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய புகார் மேலாண்மை அமைப்பு இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குடிமக்களுக்கு அவர்களின் புகார்களின் நிலை குறித்த தகவல்கள் அனைத்தையும் வழங்குவதற்கு இந்த இணையதளம் திட்டமிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் என்ற தலைப்பிலான நாடு தழுவிய கட்டுரைப் போட்டியில், சிறந்த கட்டுரைகளை எழுதிய முதல் ஐந்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT