Published : 03 Nov 2022 04:25 AM
Last Updated : 03 Nov 2022 04:25 AM

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது - முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி

பெங்களூருவில் நேற்று தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக பேசினார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர். படம்: பிடிஐ

பெங்களூரு: சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

‘கர்நாடகாவில் முதலீடு செய்யுங்கள் 2022’ என்ற தலைப்பிலான முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் தடுமாற்றத்தில் இருந்தாலும், இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது பெருமைக்குரியது.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அடித்தளங்கள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு ஏதுவான சூழல் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜிஎஸ்டி, திவால் சட்டம், வங்கி சீர்திருத்தம் என பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நடைமுறைக்கு ஒவ்வாத விதிகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. செமிகண்டக்டர் (சிப்) தயாரிப்பு மற்றும் தொழிநுட்பக் கட்டமைப்பு வாயிலாக இந்தியாவின் உற்பத்தித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகள், அதிக அளவிலான முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது.

திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது பெங்களூருதான். எளிதாக வர்த்தகம் புரிய உகந்த மாநிலங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. ‘பார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள நிறுவனங்களில் 400 நிறுவனங்கள் இங்குதான் உள்ளன. இந்தியாவின் 100-க்கு மேற்பட்ட யுனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில், 40-க்கும் மேற்பட்டவை கர்நாடகாவைச் சேர்ந்தவை.

தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், ஃபின்டெக், உயிரித் தொழில்நுட்பம், ஸ்டார்ட்-அப் மற்றும் நீடித்த எரிசக்தி ஆகியவற்றுக்கான தாயகமாக கர்நாடகா திகழ்கிறது. கர்நாடகாவின் வளர்ச்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுக்குமே சவாலாக விளங்குகிறது.

பல்வேறு துறைகளில் இம்மாநிலம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சி நடைபெறுவது முக்கியக் காரணமாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். வரும் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x