Published : 03 Nov 2022 05:23 AM
Last Updated : 03 Nov 2022 05:23 AM
புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) அரசியல் கட்சிகளின் சின்னத்துக்குப் பதில், வேட்பாளரின் புகைப்படம், விவரங்களை வைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தல்களின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத் யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறும்போது, ‘‘வாக்குப் பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்குப் பதில், வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் அவர்களுடைய விவரங்களை இடம்பெறச் செய்ய உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால், நம்பிக்கைக்கு உரியவரை, பொறுப்பானவரை வேட்பாளராக அறிவிக்கும் கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும். அதன் மூலம், குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறையும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பி.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதிடுகையில், ‘‘மனுதாரரின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.
அதேநேரத்தில் இவிஎம் இயந்திரங்களில் வாக்களிக்கும் செயல், கடைசியாகத் தான் நடைபெறுகிறது. ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அதற்கு முன்னதாக வாக்காளர்கள் முடிவு செய்கின்றனர்’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனி அடையாளம் உள்ளது. அதில் சின்னம் என்பது மிகவும் எளிதாக அடையாளம் காணக் கூடியது. தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர், வேறு கட்சிக்கு மாறாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT