Published : 02 Nov 2022 11:53 AM
Last Updated : 02 Nov 2022 11:53 AM
புதுடெல்லி: "மோர்பிநகர் பால பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்துள்ளது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின் எடை தாங்காமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற வேலைகளைச் செய்ய தகுதியற்றது" என்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தொடங்கு பாலத்தை, புதுப்பிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் பாலம் மூடப்பட்டது. 8 மாதங்கள் முதல் 12 மாதங்கள் இந்த பாலத்தை மூட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், புதுப்பிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, திட்டமிட்ட காலத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே, இப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. திறக்கப்பட்ட 4-வது நாளில் தொங்குபாலம் அறுந்து மச்சு ஆற்றில் விழுந்துள்ளது. இதில் சிக்கி குழந்தைகள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் ஆஜரான எச்.எஸ்.பஞ்சால் தடயவியல் சோதனைக்கூட அறிக்கையை சுட்டிக் காட்டிப் பேசுகையில், "பாலத்தின் தரைப்பகுதி மட்டுமே மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கேபிள் சீரமைக்கப்படவில்லை. அதனாலேயே சுமையை தாங்க முடியாமல் கேபிள் அறுந்துவிழுந்துள்ளது. பால சீரமைப்பில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டனர். இரு நிறுவனங்களுக்குமே இதை மேற்கொள்ளும் தகுதியில்லை. 2007ல் இவர்கள் தான் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் 2022லும் இவர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்ததாரர்களை காவலில் எடுத்து விசாரித்தால் தான் எதற்காக அவர்களிடம் ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டது என்பதற்கான பின்னணி தெரியவரும்" என்றார்.
இதனையடுத்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எம்ஜே கான் ஓரீவா குழுமத்தின் இரண்டு மேலாளர்களையும், இரண்டு சப் காண்ட்ராக்டர்களையும் சனிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இவர்களைத் தவிர டிக்கெட் புக்கிங் க்ளர்க், பாதுகாவலர்கள் என 5 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT