Published : 29 Nov 2016 10:35 AM
Last Updated : 29 Nov 2016 10:35 AM
500, 1000 ரூபாய் நோட்டுகளின் பிரச்சினையைத் தீர்க்க ஆந்திர ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இக்குழுவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுப்பினராக உள்ளார்.
இதுகுறித்து நேற்று மாலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சந்திரபாபு நாயுடுவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
ரூ.500, 1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டதால் நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் போதிய பணம் இல்லாமலும், ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை வெள்ளையாக மாற்ற பல வழிகளைக் கையாண்டு வருகின்றனர். மேலும், இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருவதோடு நேற்று போராட்டத்திலும் ஈடுபட்டன. இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும், தற்போதைய நிலைமையை சமாளிக்கவும், மத்திய நிதி அமைச்சகம் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க தீர்மானம் செய்துள்ளது.
இக்குழுவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தலைமை வகிக்க நேற்று மாலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டார். இக்குழுவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் இடம் பெறுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT