Published : 02 Nov 2022 07:27 AM
Last Updated : 02 Nov 2022 07:27 AM

பொய் செய்தி வெளியிட்டதாக பாஜகவின் அமித் மாள்வியா புகார் - ‘தி வயர்’ ஆசிரியர்கள் வீடுகளில் சோதனை

புதுடெல்லி: தன்னை களங்கப்படுத்தும் வகையில் பொய் செய்தி வெளியிட்டதாக பாஜகவின் அமித் மாள்வியா கொடுத்த புகாரின் பேரில், ‘தி வயர்’ செய்தி இணையதள ஆசிரியர்கள் வீடுகளில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தினர்.

பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா, ‘தி வயர்’ செய்தி இணையதளம் மீது டெல்லி காவல் துறையில் புகார் செய்தார். அதில், “தி வயர் இணையதளம், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்திக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதற்காக பொய்யான ஆவணத்தை உருவாக்கி உள்ளனர்.

குறிப்பாக, பாஜகவுக்கு எதிரானசமூக ஊடக பதிவுகளை இடைமறித்து நீக்குவதற்கான சிறப்பு வசதியை மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் தாய் நிறுவனம்) எனக்கு வழங்கி உள்ளதாக செய்தி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ‘டெக் பாக்’ என்ற செயலியை பாஜகபயன்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மெட்டா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, தி வயர் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் 420 (மோசடி), 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்), 120பி (குற்ற சதி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் டெல்லி குற்றப் பிரிவு போலீஸார், தி வயர் நிறுவனர்-ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா மற்றும் துணை செய்திஆசிரியர் ஜான்வி சென் ஆகியோரின் வீடுகள் மற்றும் தி வயர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றைஆய்வு செய்த பிறகு அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

செய்தி கட்டுரை நீக்கம்: இதனிடையே, தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் உண்மையில்லை என மெட்டா அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டுரைகளை அக்டோபர் 30-ம் தேதி தி வயர் நீக்கியது.

இதுகுறித்து தி வயர் வெளியிட்ட அறிக்கையில், “மெட்டா நிறுவனம் குறித்த செய்திக் கட்டுரையின் உண்மைத்தன்மை குறித்து நிபுணர்களின் உதவி யுடன் ஆய்வு செய்தோம். ஆவ ணங்கள் போலியானவை என தெரியவந்ததால் கட்டுரைகளை நீக்கி விட்டோம்” என கூறப் பட்டுள்ளது.

மேலும், தி வயர் சார்பில் தங்களது முன்னாள் ஆலோசகர் தேவேஷ் குமார் மீது கடந்த அக்டோபர் 29-ம் தேதி டெல்லி காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், “மெட்டா நிறுவனம் தொடர்பான செய்திக் கட்டுரைகளுக்கு ஆதாரமாக, தேவேஷ் குமார் போலிஆவணங்கள் மற்றும் மின்னஞ் சல்களை வழங்கி உள்ளார். இதன் மூலம் எங்கள் நிறுவனத்துக்கு அவர் களங்கம் ஏற்படுத்த முயன்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x