Published : 01 Nov 2022 06:15 AM
Last Updated : 01 Nov 2022 06:15 AM

சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி - வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி

புதுடெல்லி: இந்தியா, சீனா இடையிலான எல்லை லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை நீள்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான எல்லையில் அசல் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) உள்ளது. சுமார் 3,500 கி.மீ. நீளம் கொண்ட இந்தக் கோடு நெடுகிலும் இந்தோ-திபெத் எல்லைப் படையினர் (ஐடிபிபி) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 98 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தப்படி, இருதரப்பு வீரர்களும் ஒருவர் மீது மற்றொருவர் துப்பாக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

இந்த சூழ்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், லடாக்கின் கிழக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதை ஐடிபிபி வீரர்கள் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். தங்கள் தரப்பில் 4 வீரர்கள் மட்டும் உயிரிழந்ததாக தாமதமாக சீனா தெரிவித்தது. ஆனால், சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமும் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பும் தெரிவித்திருந்தன.

மேலும் இந்த மோதலின்போது, சீன வீரர்கள் கற்கள், ஆணி பதிக்கப்பட்ட கம்புகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கியது தெரியவந்தது.

இந்நிலையில், வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி முறையில் ஐடிபிபி மாற்றங்களை செய்துள் ளது. இதன்படி, ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பயிற்சி மையத்தில் ஆயுதமின்றி போரிடுவதற்கான பயிற்சி வழங்கப் படுகிறது. ஏற்கெனவே பணியில் உள்ள வீரர்கள், புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜுடோ, கராத்தே மற்றும் க்ராவ் மகா (இஸ்ரேல் தற்காப்புக் கலை) ஆகிய தற்காப்புக் கலை உட்பட மொத்தம் 15 முதல் 20 வகையான ஆயுதமில்லா போர் நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதுவரை 20 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐடிபிபி ஐஜி ஈஷ்வர் சிங் துஹான் கூறும்போது, ‘‘இந்த பயிற்சியில், எதிரியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வது, பதில் தாக்குதல் நடத்துவது குறித்த நுட்பங்கள் சொல்லித் தரப்படுகிறது. இந்த பயிற்சி பெற்ற வீரர்களால் எதிரியை நகர விடாமல் செயலிழக்க செய்ய முடியும்’’ என்றார்.

இதுதவிர, கடும் பனிப்பொழிவு, பனிமலைகள், ஆக்சிஜன் குறைவு உள்ளிட்ட கடினமான சூழல் நிலவும் பகுதிகளில் பணிபுரியும் வீரர்களின் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக உரிய போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எதிரியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வது, பதில் தாக்குதல் நடத்துவது குறித்த நுட்பங்கள் சொல்லித் தரப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x