Published : 31 Oct 2022 01:32 PM
Last Updated : 31 Oct 2022 01:32 PM
மோர்பி: "அந்தப் பெண்மணியின் மகள் இறந்துவிட்டதை அவரிடம் நான் தெரிவிக்கவில்லை" என்று குஜராத் மாநிலத்தில் நடந்த பாலம் விபத்தை நேரில் பார்த்தவரும், மீட்புப் பணியில் ஈடுபட்டவருமான ஒருவர் உருக்கத்துடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சூ ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருந்த தொங்கும் பாலம் ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான இங்கு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்ததில், அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இந்த கோர விபத்தில் 132 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சிக்குரிய விபத்தை நேரில் கண்ட பலரும் தங்களின் துயர் அனுபவங்களைத் தெரிவித்து வருகின்றனர். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவர் கூறுகையில், "என் கண் முன்பாகவே பாலம் இடிந்து விழுந்தது. அது ஓர் அதிர்ச்சியான சம்பவம். நான் மீட்புப் பணியில் இருந்தபோது என்னிடம் வந்த பெண்மணி ஒருவர் தனது மகளின் புகைப்படத்தை காட்டி, அவளை மீட்டேனா என்று கேட்டார். நான் அவரது மகள் இறந்துவிட்ட செய்தியை அந்தப் பெண்ணிடம் கூறவில்லை" என்றார். இந்த நபர் இரவு முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
Tribute to Sadgat who died in Morbi bridge collapse accident and pray for speedy recovery of injured person#MorbiBridge #MorbiBridgeCollapse#MorbiCableBridge#MorbiCableBridgeCollapses pic.twitter.com/TOdyl6gyjt
விபத்தை நேரடியாக பார்த்த மற்றொரு நபரான சுப்ரான் கூறுகையில், "பாலத்தில் நெருக்கடி அதிகமாக இருந்தது. கேபிள் அறுந்து ஒரு நொடிக்குள் பாலம் கீழே விழந்துவிட்டது. அதனால், மக்கள் ஒருவர் மீது ஒருவராக ஆற்றில் விழுந்தனர்" என்றார்.
மோர்பி நகரவாசியான ரஞ்சன்பாய் பாட்டீல் மீட்பு பணியின்போது அவரும் மற்றவர்களும் சந்தித்த சிரமங்கள் குறித்து உள்ளூர் ஊடகத்திடம் கூறும்போது, "ஆற்றில் நீந்த முடியாதவர்களை நாங்கள் மீட்டு கரைக்கு ஏற்றிக் கொண்டிருந்தோம். பலர் ஆற்றில் விழுந்திருந்தனர். எங்களால் அவர்கள் எல்லோரையும் காப்பாற்ற முடியவில்லை" என்றார் வேதனையாக.
இதனிடையே, குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்து குறித்து குறிப்பிடும்போது, “என் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் எப்போதும் கடந்ததில்லை. ஒருபுறம் என் இதயம் வலியில் கனக்கிறது. இன்னொரு புறம் கடமையின் பாதை என்னை அழைக்கிறது" என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார். | வாசிக்க > “கனத்த இதயம் ஒருபுறம்... கடமையின் பாதை மறுபுறம்” - குஜராத் விபத்தால் கலங்கிய பிரதமர் மோடி
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் கடந்த 1880-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பாலம் கட்டுவதற்கான பொருட்கள் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், 7 மாத புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த புதன்கிழமைதான் பாலம் திறக்கப்பட்டது.
இதற்கு முன்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு கிழக்கு கொல்கத்தா நகரத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து நடந்த விபத்தில் 26 பேர் பலியாகினர். கடந்த 2011ம் ஆண்டு வடகிழக்கு மாநிலத்தின் மலைநகரமான டார்ஜிலிங்கில் திருவிழா கூட்டம் நிறைந்திருந்த பாலம் ஒன்று விழுந்ததில் 32 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT