Published : 31 Oct 2022 11:55 AM
Last Updated : 31 Oct 2022 11:55 AM

மோர்பி விபத்து காரணமாக காங்கிரஸின் குஜராத் பரிவர்தன் சங்கல்ப் யாத்திரை ஒத்திவைப்பு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி குஜராத் மாநிலத்தில் இன்று தொடங்க இருந்த பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையை, மோர்பி பாலம் விபத்து காரணமாக செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் குஜராத்தின் ஐந்து மண்டலங்களை உள்ளடக்கி பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையை திங்கள்கிழமை (அக்.31) நடத்துவதாக அறிவித்திருந்தது. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோர்பி நகரில் உள்ள தொங்கும் பாலம் இடிந்து விழுந்து நடந்த கோர விபத்தில் 140க்கும் அதிமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், காங்கிரஸ் தனது யாத்திரையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்த நாள், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளான அக்.31 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தப்போதாக அறிவித்திருந்தது.

இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் ஜகதீஸ் தாகோர் கூறுகையில், "5,432 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற உள்ள பரிவர்தன் சங்கல்ப் யாத்திரை 145 பொதுக்கூட்டங்கள், 95 பேரணிகளை உள்ளடக்கி , 45 மில்லியன் மக்களை நேரடியாக தொடர்பு கொள்ளுவதை நோக்கமாக கொண்டுள்ளது.இந்த யாத்திரையில் 1 மில்லியனுக்கும் அதிகமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற இருக்கும் 11 உறுதிமொழிகள் குறித்து யாத்திரையில் எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த யாத்திரையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பகால், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர திக்விஜய் சிங், கமல் நாத், காங்கிரஸ் எம்எல்ஏ சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.குஜராத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவம், ரூ.3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி, மின்சார கட்டணம் தள்ளுபடி, 1 மில்லியன் அரசு வேலைவாய்ப்புகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3,000 உதவித்தொகை, 3000 ஆங்கில வழிப்பள்ளிகளைத் திறப்புது, கோவிட் 19 தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது.

இதற்கிடையில் மோர்பி நகர் பாலம் விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், " விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புனரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் திறக்கப்ப 5,6 நாட்களுக்கு தொங்கு பாலம் எவ்வாறு சீர்குலைந்தது என்பது குறித்து ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைக்து உதவிகளும் நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குஜராத் சென்றுள்ளார். நாங்கள் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. இதுகுறித்து யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x