Published : 12 Nov 2016 10:27 AM
Last Updated : 12 Nov 2016 10:27 AM
தெலங்கானாவில் ரூ.500, 1,000 நோட்டுகளை வாங்க மறுத்ததால் 2 மதுபான கடைகளை ‘குடிமகன்’கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதனால் நாடு முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு சிறு வர்த்தகர்கள் முதல் பெரு வணிக வளாக அதிபர்கள் வரை தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மதுபான கடைகளிலும் இதே நிலை நீடிப்பதால் குடிமகன்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்று குடிமகன்கள் சிலர் மதுபான கடைகளில் மது வாங்க முயற்சித்துள்ளனர். அப்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க முடியாது என கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் கைவிரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குடிமகன்கள் சிலர், நல்கொண்டா பகுதியில் இருந்த இரு மதுபான கடைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். எனினும் போலீஸார் வருவதற்குள் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT