Published : 30 Oct 2022 11:42 PM
Last Updated : 30 Oct 2022 11:42 PM
குஜராத்: குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில பஞ்சாயத்து அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா இந்த தகவலைத் தெரிவித்தார். இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா உட்பட பல அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
விபத்தை நேரில் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அது குறித்து பேசுகையில், "தீபாவளி விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டு ஏராளமானோர் புதிதாக திறக்கப்பட்ட இந்தப் பாலத்தை காண வந்தனர். இது சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம். பாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். அது இடிந்து விழுந்தபோது, மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்" என்று தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழும் வீடியோ காட்சிகளும், அதில் மக்கள் பயத்தில் அலறுவது போன்ற காட்சிகள் நெஞ்சை பதறவைக்கின்றன. தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையும், இந்திய ராணுவமும், விமானப்படையும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
மோர்பி கேபிள் பாலம்: மோர்பி மாவட்டத்தின் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்துவந்துள்ள இந்த கேபிள் பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையானது. மோர்பி பகுதியில் அமைந்துள்ளது மாச்சூ ஆறு. இந்த ஆற்றில் மக்கள் பயன்பாட்டிற்காக தொங்கு பாலமாக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டது. 230 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் காலத்தின்போது கட்டப்பட்டது.
இது புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக எழுப்பப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்துவந்தன. தீபாவளிக்கு முன்பு பழுதுபார்க்கும் பணி முடிந்தநிலையில், 26ம் தேதி மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. குஜராத்தி புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாலம் திறந்தது முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக இருந்துள்ளது.
பலரும் பாலத்தில் இருந்தபடி புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். இப்படியான நிலையில் வார விடுமுறையை கழிக்க, நேற்றும் இன்றும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்துள்ளது. மோர்பி பகுதி மட்டுமல்ல ராஜ்கோட் போன்ற மற்றப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகமாக வந்துள்ளனர். அப்படி நேற்று வந்தவர்களில் சிலர் பாலத்தில் சில தவறான செயல்களில் ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகின. இதனிடையே, இன்று ஒரே நேரத்தில் 400க்கும் அதிகமானவர்கள் பாலத்தில் குவிய, திடீரென பாலம் அறுந்து விழுந்தது. அதிக பாரம் காரணமாக பாலம் விழுந்திருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் விழுந்துவர்களில் பெரும்பாலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் பலர் பலியாகியுள்ளனர். பாலம் அறுந்து விழுந்து பயத்தில் பொதுமக்கள் அலறியதை நினைவூட்டி பதறுகின்றனர் நேரில் பார்த்தவர்கள். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT