Last Updated : 30 Oct, 2022 09:37 AM

5  

Published : 30 Oct 2022 09:37 AM
Last Updated : 30 Oct 2022 09:37 AM

உ.பி. அரசின் சன்ஸ்கிருத் பல்கலைக்கழகத்தில் ரூ.200 கட்டணத்தில் மக்கள் ஜோதிடம் பார்க்க ஏற்பாடு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: வாரணாசியில் இயங்கி வரும் உத்தர பிரதேச அரசு பல்கலைக்கழகம், பொது மக்களுக்கு ஜோதிடம் பார்க்கத் தயாராகி வருகிறது. இதற்காக அதன் ஜோதிடத் துறையில் ரூ.200 கட்டணத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட உள்ளது.

உ.பி.யின் வாரணாசியில் 1791-ல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் அரசு சன்ஸ்கிருதி கல்லூரி தொடங்கப்பட்டது. 1958-ல் இது, ‘சம்பூர்ணானந்த் சன்ஸ்கிருத் விஷ்வ வித்யாலயா’ என்ற பெயரில் உ.பி. அரசு பல்கலைக்கழகமாக மாறியது. இதன் தொடக்கம் முதலாகவே ஜோதிடத் துறையும் அதன் துறைகளில் ஒன்றாக உள்ளது. இத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஜோதிடம், வாஸ்து ஆகியவற்றை கணித்து கூறும் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பிரிவுக்கு உத்தர பிரதேச மாநில பத்திரப் பதிவுத் துறை இணை அமைச்சரான ரவீந்திரா ஜெய்ஸ்வால் உதவ முன்வந்துள்ளார். இவர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சத்தை சன்ஸ்கிருத் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கியுள்ளார்.

இதுகுறித்து சன்ஸ்கிருத் பல்கலைக்கழக துணை வேந்தரான ஹரேராம் திரிபாதி கூறுகையில், "பொதுமக்களுக்கான பிரிவை தொடங்க பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. இதற்கான நிதி தற்போது கிடைத்துள்ளதால் இப்பிரிவு விரைவில் செயல்பட உள்ளது. ஜோதிடம் பார்க்க ஒருவருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும்” என்றார்.

இக்கட்டணத்தில் பாதித்தொகை ஜோதிடம் கணிப்பவருக்கு கொடுக்கப்பட உள்ளது. மீதியை இரண்டாகப் பிரித்து அதன் ஒரு பகுதியை பல்கலைக்கழகத்திற்கும் மற்றொரு பகுதியை ஜோதிடத் துறையின் வளர்ச்சிக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாஸ்து கூறும் பிஎச்யூ

இதுபோல், பொதுமக்களுக்கு ஜாதகம், ஜோதிடம் கணிப்பது மற்றும் வாஸ்து ஆலோசனை கூறும் பணியை வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைகழகம் (பிஎச்யூ) செய்து வருகிறது.

பழம்பெரும் மத்திய பல்கலைக்கழகமான இதன் ஜோதிடத் துறையில் மாலை வேளைகளில் அதன் 9 பேராசிரியர்கள் இப்பணியை சுமார் 15 ஆண்டுகளாக செய்கின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பிஎச்யூ ஜோதிடத்துறை தலைவரும், பொதுமக்களுக்கான ஜோதிடப் பிரிவின் அமைப்பாளருமான பேராசிரியர் வினய்குமார் பாண்டே கூறும்போது, “இங்கு ஜாதகங்களை கணிக்கவும் வாஸ்து மற்றும் ஜோதிடம் பார்க்கவும் இந்துக்கள் மட்டுமின்றி, முஸ்லிம், சீக்கியர், ஜெயின் மற்றும் கிறிஸ்தவர்களும் வருவது உண்டு. இப்பணியை பொது வெளியில் செய்பவர்கள் மக்களை ஏமாற்றி அதிக தொகை வசூலித்து விடுகின்றனர். இதனால், கல்வியாளர்கள் என்பதால் எங்களிடம் நம்பிக்கையுடன் வருகின்றனர்” என்றார்.

இங்கு தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 10 பேருக்கு ஜோதிடம் பார்க்கப்படுகிறது. நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்பிரிவை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x