Published : 29 Oct 2022 04:20 PM
Last Updated : 29 Oct 2022 04:20 PM
காந்திநகர்: குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு தேர்தலுக்கு முன்பாக வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவர் பின்பற்றும் மதம், அவரது பாலினம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கையை பாஜக கொண்டிருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பாஜக வெற்றி பெற்றால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அது வாக்குறுதி அளித்தது. எனினும், இவ்விஷயத்தில் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொது சிவில் சட்டம் அரசியல் அமைப்புக்கும் சிறபான்மையினருக்கும் எதிரானது என அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, பொது சிவில் சட்டம் கொண்டு வர நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறியது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைக்கு உட்பட்டது என்றும், அவர்கள் அதற்கான சட்டத்தை கொண்டு வரலாம் அல்லது கொண்டு வராமல் போகலாம் என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது.
எனினும், தங்கள் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச பாஜக அரசுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன. இதைப் பின்பற்றி, குஜராத் மாநில பாஜக அரசும் இது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் மாநில அரசு குழு அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால், அம்மாநில வாக்காளர்களைக் கவரும் நோக்கில் இதற்கான அறிவிப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT