Published : 29 Oct 2022 02:50 PM
Last Updated : 29 Oct 2022 02:50 PM
சூரத் (குஜராத்): ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கும் பணியை அக்கட்சி தொடங்கியுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து அக்கட்சி கருத்து கேட்பு நடத்தியது. இதில் பகவந்த் மானுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் வெற்றியை அடுத்து அவர் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், அதே அணுகுமுறையை குஜராத்திலும் ஆம் ஆத்மி தொடங்கி இருக்கிறது. சூரத்தில் இன்று (அக். 29) செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து குஜராத் மக்களே தீர்மானிக்கலாம் என தெரிவித்தார்.
இதற்காக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்கள் 4 பேரின் பெயர்களை கட்சி பரிந்துரைத்துள்ளது. இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்து அதனை தெரிவிக்கலாம். இதற்காக, 6357000360 என்ற மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டோ, வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலமோ, வாய்ஸ் மெசேஜ் மூலமோ தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். அல்லது aapnocm@gmail.com என்ற இ-மெயில் மூலம் விருப்பத்தை தெரிவிக்கலாம். வரும் நவம்பர் 3ம் தேதி மாலை 5 மணி வரை பொதுமக்கள் இவ்வாறு தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி, முடிவு நவம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர் என தெரிவித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவால், ஆனால் பாஜகவிற்கு இதில் நம்பிக்கை இல்லை என விமர்சித்துள்ளார். கடந்த குஜராத் சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற விஜய் ரூபாணியை அக்கட்சி ஏன் பதவி விலக வைத்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தகுதியற்றவரா, சிறப்பாக செயல்படாதவரா, ஊழல் செய்தவரா என கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால், இந்தக் கேள்விகளுக்கு பாஜக ஏன் இதுவரை பதில் அளிக்கவில்லை என வினவினார். விஜய் ரூபாணியும் அவரது அமைச்சரவையும் பதவி விலகியதை அடுத்து, பாஜக மக்களின் நம்பிக்கையைப் பெற தேர்தலை எதிர்கொண்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருப்பதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்த கெஜ்ரிவால், ஆம் ஆத்மிக்கு ஆதரவான அலை குஜராத்தில் வீசுவதாகக் குறிப்பிட்டார். 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும் மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாகவும், என்ன செய்தோம் என்பதை பட்டியலிட முடியாத நிலையில் அவர்கள் இருப்பதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்தார். ஆம் ஆத்மி அலை வீசி வருவதால் ஆம் ஆத்மி தலைவர்களை குறைகூறுவதிலேயே அவர்கள் மும்முரமாக இருப்பதாகவும், மக்கள் பணியை மேற்கொள்வதில்லை என்றும் அர்விந்த் கெஜரிவால் விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...