Published : 29 Oct 2022 02:36 PM
Last Updated : 29 Oct 2022 02:36 PM
மும்பை: மும்பை - காந்திநகர் மார்க்கத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலில் மாடு அடிபட்டு விபத்துக்குள்ளானதில், ரயிலின் முன்பக்கம் சேதம் அடைந்தது. வந்தே பாரத் ரயில் இப்படி சேதமடைவது இது மூன்றாவது முறையாகும்.
சனிக்கிழமை காலையில், மும்பை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து குஜராத்தில் உள்ள காந்திநகருக்கு புறப்பட்டுச் சென்ற வந்தே பாரத் விரைவு ரயில், மும்பை அருகே மாடுகள் மீது மோதி விபத்துள்ளானது. இதில், ரயிலின் முன்பக்கம் சேதமடைந்தது. விபத்து குறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை செய்தித்தொடர்பாளர் சுமித் தாகூர் கூறுகையில், "மும்பை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்தி நகருக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் விரைவு ரயில், அடுல் என்ற பகுதிக்கு அருகில் சென்றபோது, குறுக்கே வந்த மாடு ஒன்றின் மீது மோதியது.
இந்த விபத்து காலை 8.17 மணிக்கு நிகழ்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 15 நிமிடங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. ரயிலின் முன்பக்கம், ஓட்டுநர் பகுதியில் உள்ள மூக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள சேதம் தவிர வேறு ரயிலுக்கு வேறு எந்த சேதமும் இல்லை. ரயில் சீராக இயங்குகிறது. விரைவில் அது அதன் இலக்கைச் சென்றடையும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் மும்பை - காந்திநகர் மார்க்கமாக செல்லும் வந்தே பாரத் ரயில், அடுத்தடுத்த நாளில் இரண்டு முறை மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை சென்ட்ரல் - குஜராத்தின் காந்தி நகர் வரை செல்லும் இந்த வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஓடத்தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் 160 கி.மீ., வேகத்தை எட்டக்கூடியது எனக் கூறப்படுகிறது. நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயிலை சென்னை - மைசூர் - பெங்களூரு மார்க்கத்தில் பிரதமர் மோடி நவம்பர் மாதம் தொடங்கி வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT