Published : 29 Oct 2022 08:46 AM
Last Updated : 29 Oct 2022 08:46 AM

கேதார்நாத் யாத்திரை | ஹெலிகாப்டர் சேவை மூலம் ரூ.80 கோடி வருவாய் - கோவேறு கழுதை சவாரி மூலம் ரூ.101 கோடி வருமானம்

டேராடூன்: கேதார்நாத் புனித யாத்திரையில் கோவேறு கழுதை சவாரி மூலம் ரூ.101 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த புனித தலங்கள் பனிக் காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடை காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரை மட்டுமே திறந்திருக்கும். இந்த ஆண்டுக்கான சார்தாம் புனித யாத்திரை கடந்த மே 3-ம் தேதி தொடங்கி அக்டோபர் 26-ம் தேதி நிறைவு பெற்றது.
இந்த ஆண்டு 43 லட்சம் பக்தர்கள் சார்தாம் புனித யாத்திரை மேற்கொண்டனர்.

இதில் கேதார்நாத் கோயிலுக்கு மட்டும் 15.61 லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த கோயிலுக்கு சாலை மார்க்கமாக செல்ல முடியாது. சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் மலையேறிச் செல்ல வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோவேறு கழுதை சவாரியும், ஹெலிகாப்டர் சேவையும் இயக்கப்படுகிறது.

கேதார்நாத்தில் சுமார் 8,664 கழுதைகள், பக்தர்களை சுமந்து செல்கின்றன. 9 தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர் சேவைகளை இயக்கி வருகின்றன. கழுதை சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.500 முதல் ரூ.2,500-ம் ஹெலிகாப்டர் சேவைக்கு ரூ.4,680 முதல் ரூ.7,750-ம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கழுதை சவாரியை விட ஹெலிகாப்டர் சேவை பயணிகளின் விருப்ப தேர்வாக முதலிடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு கேதார்நாத் புனித யாத்திரையில் கழுதை சவாரி சேவை மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு 15.61 லட்சம் பேர் கேதார்நாத் கோயிலுக்கு வருகை தந்துள்ள நிலையில் 5.3 லட்சம் பேர் கழுதை சவாரி மூலம் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதன்மூலம் கழுதைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.101.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு ரூ.80 கோடி மட்டுமே வருவாய் கிடைத்திருக்கிறது. கோவேறு கழுதை சேவை, ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி மூலம் அரசுக்கு ரூ.8 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x