Last Updated : 11 Jul, 2014 09:45 AM

 

Published : 11 Jul 2014 09:45 AM
Last Updated : 11 Jul 2014 09:45 AM

கிராமப்புற மக்களை வஞ்சிப்பதே மோடி அரசின் நோக்கம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா குற்றச்சாட்டு

கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும் பான்மையான இந்தியர்களை வஞ்சித்து நகர்ப்புறவாசிகளின் நலன்களை மேம்படுத்துவதுதான் மோடி அரசின் நோக்கமாக உள்ளது, இது மத்திய பட்ஜெட்டில் தெளிவாகி யுள்ளது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

மத்திய பட்ஜெட் மூலம் அரசு தனது வாக்குறுதிகளை நடவடிக்கைத் திட்டங்களாக மாற்றும் என்று மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி செய்த அறிவிப்புகளில் கவர்ச்சிகர மானவை மட்டும் புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயாரித்த திட்டத்தின் பகுதியாக நிதிப் பற்றாக்குறை இலக்குகளை தக்கவைத்துக்கொண்டுள்ளது நிதி அமைச்சரின் எச்சரிக்கையான அணுகுமுறையைக் காட்டுகிறது.

முக்கியமான முன்னுரிமைகளாக நிதி அமைச்சர் பணவீக்கம், வேலை வாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள், உற்பத்தித் துறை ஆகியவற்றை தெரிவித்துள்ளார். எனினும் பட் ஜெட்டின் பல அறிவிப்புகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களின் மறு உருவகங்கள் ஆகும். 16 புதிய தொழில் நகரியங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன, நான்கு தொழில் முற்றங்கள்-டெல்லி-மும்பை, அமிர்தசரஸ்-கொல்கத்தா, பெங்களூரு-மும்பை மற்றும் சென்னை-பெங்களூரு- முந்தைய ஆட்சியின்போதே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நரேந்திர மோடி 100 புதிய நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கப் போவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதற்கு வெறும் ரூ. 7,060 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த தொகை ஒரு நகரை உருவாக்ககூட போதாது.

பாதுகாப்பு உற்பத்தி துறையில் அந்நிய முதலீட்டை ஈர்க்க போதுமான நடவடிக்கை இல்லை. இதற்கு 49 சதவீத உச்சவரம்பு நிர்ணயிப்பது அந்நிய முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தாது.

உற்பத்தித் துறையில் வளர்ச்சியை வேகப்படுத்த திட்டங்கள் அறிவிக்கப் படவில்லை. புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ.10,000 கோடி முதலீடு உதவி ஏற்பாடு வரவேற்கத்தக்கது. இத்துறைக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் வசதி வளர்ச்சிக்கு உதவும்.

தனியார் துறை மற்றும் நகரமய மாதலை மேம்படுத்துவதை நோக்கித் தான் இந்த அரசின் முனைப்பு இருக்கும் என்று தெளிவாகிறது. தொழில் வளம், உற்பத்தி, வேலை வாய்ப்பு, நகரமயமாக்கல் ஆகிய வற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாலும் அது நல்வாழ்வு அரசின் அடிப்படைக் கடமையான சமூகத் துறை செலவினங்களைக் குறைப்பதில் இருக்கக்கூடாது.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம், மருத்துவ வசதி, கல்வி ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் எதுவும் கூறவில்லை. இன்னமும் கிராமப் புறங்களில் வசிக்கும் பெரும் பான்மையான இந்தியர்களை வஞ்சித்து நகர்ப்புறவாசிகளின் நலன் களை மேம்படுத்துவதுதான் மோடி அரசின் முனைப்பாக இருப்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது.

ஆரம்ப சுகாதாரம், கல்வி, கிராமப்புற வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இந்த அரசு போதுமான கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x