Published : 28 Oct 2022 09:00 AM
Last Updated : 28 Oct 2022 09:00 AM
புதுடெல்லி: ரூபாய் நோட்டில் கடவுள் படங்களைசேர்க்க வேண்டும் என பிரதமரிடம் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கோரியது சர்ச்சையாகியுள்ளது. இந்தியாவில் குப்தர் காலத்தில் தொடங்கிய இந்த வழக்கம் முகலாயர்களாலும் தொடரப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் முடிவடைந்ததாக வரலாற்று பதிவுகள் மூலம் தெரியவருகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால், இரண்டு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி படத்தையும் மறுபுறம் இந்துக்களின் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களையும் அச்சடிக்க வேண்டும்” என்றார்.
அரசியல் ஆதாயத்துக்காக கேஜ்ரிவால் இதை கூறுவதாக பாஜகவும், காங்கிரஸும் விமர்சிக்கின்றன. இந்தக்கருத்தால் கேஜ்ரிவாலின் மதசார்பு நிலை தெரிவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. எனினும், இந்து கடவுள்களை நாணயத்தில் பொறிக்கும் வழக்கம் இந்தியாவுக்கு புதியதல்ல எனத் தெரியவந்துள்ளது.
கடவுள்களின் உருவங்களும், சிலைகளும் கிரேக்கர்களிடம் இருந்து இந்தியாவில் அறிமுகமானதாக வரலாறு பதிவுகள் உள்ளன. கடவுள் உருவங்களில் தலையின் பின்னால் காட்டப்படும் ஒளிவட்டமும் கிரேக்கர்களின் கலாச்சாரமே ஆகும். இந்தியாவுக்கு படையெடுத்து வந்து, கி.மு. 4-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இந்தோ- கிரேக்கர் சாம்ராஜ்ஜியத்தில் முதன்முதலாக உலோகக் காசுகளில் கடவுள் லட்சுமியின் உருவம் முத்திரையாக பொறிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இவர்களுக்குப் பின் வந்த இந்தோ- பார்த்தியர்களும் இவ்வழக்கத்தை தொடர்ந்தனர். இடையில் சில ஆட்சியாளர்களால் தவிர்க்கப்பட்ட இவ்வழக்கம் மீண்டும் கி.மு. 3-ம்நூற்றாண்டில் மவுரியப் பேரரசர்களால் தொடங்கியது. பிறகு வந்த குப்தப்பேரரசில் இந்த வழக்கம் அதிகரித்துள்ளது. அப்போது லட்சுமியுடன், சிவன், சிவன்-பார்வதி, விஷ்ணு-லஷ்மி, கஜலட்சுமி, சரஸ்வதி ஆகிய கடவுள்களின் உருவங்கள் அச்சிடப்பட்ட காசுகளும் புழக்கத்தில் இருந்துள்ளன. இது, கடைசி இந்து மன்னர் ஆட்சியான, சவுகான் வம்சத்தின் பிருதிவிராஜ் சவுகான் வரையும் தொடர்ந்துள்ளது. இதன் மூலம் இந்து மன்னர்கள் தங்கள் பக்தியை பொதுமக்களிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
ராஜ் கிஷோர் ராஜே எனும் வரலாற்று ஆசிரியர் எழுதிய ‘ஹகீகத்-ஏ-அக்பர்’ எனும் நூலின்படி, முகம்மது கோரியின் படையெடுப்புக்கு பின் தொடர்ந்த டெல்லி சுல்தான்கள் ஆட்சியின் காசுகளிலும் லட்சுமியின் உருவம் இடம் பெற்றன. முஸ்லிம் ஆட்சியாளர்களான கில்ஜி, துக்ளக் மற்றும் லோதி வம்சங்களிலும் லட்சுமியின் உருவம் பொற்காசுகளில் பொறிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கம் முகலாயப் பேரரசர் அக்பர் ஆட்சியில் நிறுத்தப்பட்டது. எனினும், அவரது நிர்வாகத்தில் பல இந்துக்கள் இடம்பெற்றதால் அவர்களை அனுசரிக்கும் வகையில் ராமர், ராமர்-சீதை, திரிசூலம் மற்றும் ஸ்வஸ்திக் சின்னத்தை அவர் பொறித்தார். இவ்வாறு காசுகளில் தொடர்ந்த இந்து கடவுள்களின் உருவங்கள், இடையில் சில வம்சங்களின் மன்னர்களால் நிறுத்தப்பட்டன. எனினும் அவை போர்ச்சுகீசியர் மற்றும் டச்சுக்காரர்களின் ஆட்சியிலும் தொடர்ந்தன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உத்தரபிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ கூறும்போது, ‘வணிகர்களை போல், கிறிஸ்தவ மதகுருமார்களும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். இவர்கள் இந்தியக் காசுகளில் லட்சுமியின் உருவம் இருப்பதை ஆட்சேபித்து இங்கு ஆட்சியிலிருந்த போர்ச்சுகீசிய அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால், இதை போர்ச்சுகீசிய அரசு ஏற்க மறுத்து விட்டது. பல காலங்களாக லட்சுமியின் உருவம் பொறித்த காசையே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் எனவும் இதில் திடீர் மாற்றம் செய்தால் அதை மக்கள் ஏற்க மறுத்து வணிகர்களுக்கு சிக்கலாகி விடும் என்று அந்த அரசு காரணம் கூறியது. பிறகு ஆங்கிலேயர்கள் தான்தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்து கடவுள்களை நிறுத்தி தங்கள் மன்னர்களின் உருவங்களை பொறிக்கத் தொடங்கினர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 9 Comments )
மேலும் ஒரு ஐந்து வருடம் பிஜேபி ஆட்சியில் இருந்தால் நாம் எல்லாம் குப்தர்கள் காலத்துக்கு சென்றுவிடுவோம், இது தான் நவீன இந்தியா என்பார்கள்
0
0
Reply
வாடிகன், இரான் தலைவரிடம் இருந்து அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமே !
0
0
Reply