Published : 28 Oct 2022 07:30 AM
Last Updated : 28 Oct 2022 07:30 AM
புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றது, மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக பரிந்துரை அளித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது இந்த வழக்கை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம், இந்த விவகாரத்தில் கட்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது
மத்திய அரசு தாக்கல் செய்தபதில் மனுவில், “தேர்தல் வாக்குறுதிகளில் தேவையற்ற இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இலவச திட்ட விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 4-ம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், தேர்தல் வாக்குறுதிகளில் தேவையற்ற இலவச திட்டங்களை தடுக்க சட்டத்தில் திருத்தங்கள் செய்யலாம் என்று கருதுகிறோம். இதுகுறித்து அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்துகளை அக்டோபர் 19-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி பல்வேறு கட்சிகள் தங்கள் நிலைப்பாடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் கடிதங்களை சமர்ப்பித்துள்ளன.
பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:
வாக்காளர்களை கவரவே தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இது ஏமாற்று வேலை. அதேநேரம் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது.
அதாவது வீட்டு வசதி திட்டங்கள் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அத்தியாவசிய திட்டங்களை அறிவிக்கலாம்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் வேலையிழந்தனர். மக்களின் நலன் கருதி ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இதுபோன்ற திட்டங்கள் அவசியமானவை. ஆனால் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேவையற்ற இலவச வாக்குறுதிகளால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
பாஜகவை பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றது. வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது. எங்களது நிலைப்பாட்டை தேர்தல்ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இலவச கலாச்சாரத்தால் வளர்ச்சி தடைபடும். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் முறியடிக்க வேண்டும்" என்றார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...