Published : 28 Oct 2022 07:33 AM
Last Updated : 28 Oct 2022 07:33 AM
கொல்லம்: ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் சிவில் சொசைட்டி பிரிவு தலைவராக மாதா அமிர்தானந்தமயி தேவியை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
ஜி 20 அமைப்பில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியா கடந்த 1999-ல் இணைந்தது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்தாண்டு நவம்பர் 30-ம் தேதி வரை ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. அடுத்த ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
ஜி20 அமைப்பில் சிவில் சொசைட்டி அமைப்புகளின் (சிஎஸ்ஓ) பிரதிநிதித்துவம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. இது சி20 என அழைக்கப்படுகிறது.
ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு, அரசுசாரா நிறுவனங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்காக இந்த சி20 அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட சிவில் சொசைட்டி அமைப்புகள், பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த சி20 பிரிவுக்கு இந்தியத் தலைவராக மாதா அமிர்தானந்தமயி தேவியை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதற்காக மாதா அமிர்தானந்தமயி தேவி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டமாக நடந்த சி20 ஆன்லைன் கூட்டத்தில் பேசிய மாதா அமிதானந்தமயி தேவி, ‘‘உலகம் இன்று பசி, மோதல், உயிரினங்கள் அழிவு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற மிக முக்கியமான பிரச்சினைகளை சந்திக்கிறது. இதற்கு தீர்வு காண நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பல உயிர்களை காக்க புதுமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT