Published : 27 Oct 2022 07:39 PM
Last Updated : 27 Oct 2022 07:39 PM

யோகி குறித்து அவதூறு பேச்சு: சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆசம் கான் | கோப்புப் படம்

லக்னோ: யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 பொதுத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக ஆசம் கான் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், இரு தரப்புக்கு இடையே மோதலை உண்டு பண்ணும் நோக்கில் ஆசம் கான் பேசியது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், எனவே, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டார். எனினும், இந்த வழக்கில் ஆசம் கான் ஜாமீன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசம் கானின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பறிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஆசம் கான் தெரிவித்துள்ளார். தான் நம்பிக்கை இழக்கவில்லை என்றும், அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டதாக தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியில், அதன் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அடுத்த தலைவராக ஆசம் கான் பார்க்கப்படுகிறார். ராம்பூர் மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களிலும் ஆசம் கான் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார். 2017ல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது நில அபகரிப்பு, ஊழல் என 87 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் 27 மாதங்கள் சிறையில் இருந்த ஆசம் கானுக்கு கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

உத்தரப் பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட் மாநில அரசுகள், வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிக்கும் நிலை வரை அமைதி காக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஆசம் கானுக்கு எதிரான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x