Published : 27 Oct 2022 01:06 PM
Last Updated : 27 Oct 2022 01:06 PM
புதுடெல்லி: தனது பாட்டி இந்திரா காந்தி, சோனியா காந்தி தான் பெற்றிராத மகள் என்று தன்னிடம் கூறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவிடம் தலைமைப் பொறுப்புகளை சோனியா காந்தி ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றில் தாய் சோனியாவை புகழ்ந்து ராகுல்காந்தி பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், "அம்மா, தாதி ஒரு முறை என்னிடம் கூறினார். அவர் பெற்றிராத மகள் நீ என்று. அவர் எவ்வளவு சரியாக சொல்லியிருக்கிறார். உனது மகனாக இருப்பதற்கு பெருமைப் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சோனியா காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியுடன் இருக்கும் இளைமைக்கால படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதேபோல், சோனியா பற்றி பிரியங்கா காந்தி வத்ரா தனது இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகரமான பதிவொன்றில், " நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் அம்மா. இந்த உலகம் என்ன யோசித்தாலும், பேசினாலும் பரவாயில்லை இதை எல்லாம் நீ அன்பிற்காகவே செய்தாய் எனக்கு தெரியும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அக்.17 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் தன்னுடன் போட்டியிட்ட சசி தரூரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே தேர்வாகியிருந்தார். கடந்த 24 வருடங்களுக்கு பின்னர் காந்தி குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருந்த சோனியா காந்தி, தலைமை பொறுப்பை மல்லிகார்ஜூன கார்கேவிடம் நேற்று ஒப்படைத்தார். அப்போது பேசிய அவர், " காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒன்று. இன்றிலிருந்து அந்த பொறுப்பிலிருந்து நான் விடுபடுகிறேன். இப்போது நான் மிகவும் நிம்மதியாக உணருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். சோனியா காந்தி சுமார் 23 வருடங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து அக்கட்சியை வழிநடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை: இதற்கிடையில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, கார்கேவின் பொறுப்பேற்பு நிகழ்வில் நேரில் கலந்து கொண்டார், இந்தநிலையில், தீபாவளி, கார்கேவின் நிகழ்ச்சிகளுக்காக மூன்று நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்திய ஒற்றுமை யாத்திரையை வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
Ma, Dadi once told me you were the daughter she never had.
How right she was.
I’m really proud to be your son. pic.twitter.com/RzTQsvKlKH— Rahul Gandhi (@RahulGandhi) October 26, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT