Published : 27 Oct 2022 08:23 AM
Last Updated : 27 Oct 2022 08:23 AM
கேரளாவில் இடதுசாரி அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தகுதிநீக்கம் செய்யும் அஸ்திரத்துடன் ஆளுநர் களமாட, பதிலுக்கு கேரள அரசோ பல்கலைக்கழகத்தில் தலையிடும் அதிகாரத்தையே ஆளுநரிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கண்ணூரில் பற்றிய கனல்!: கடந்த 2019-ல், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவிலான வரலாற்று அறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பெரும் பிரச்சினையாக எதிரொலித்த நேரம் அது. ஆளுநர் ஆரிப் முகமது கான் அதை ஆதரித்து அந்தக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. வரலாற்று ஆராய்ச்சியாளர் இர்பான் ஹபீப் தன்னைத் தாக்க பாய்ந்ததாகவும், துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் அதைக் கண்டுகொள்ளவில்லை எனவும் முதல் பரபரப்பை பற்ற வைத்தார் ஆளுநர் ஆரிப். அந்தத் தாக்குதலில் தனது உதவியாளரின் சட்டை கிழிந்ததாகவும் ஆளுநர் குற்றம் சாட்டினார்.
கேரள அரசு தாமாக முன்வந்து, தான் குற்றஞ்சாட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தார் ஆளுநர். ஆனால் இடதுசாரிகள் இதைக் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட முதல் உரசல் அங்குதான் ஆரம்பமானது. ஆளுநர் குற்றம்சாட்டிய வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப்க்கு 91 வயதாகிறது. அந்த வயதுடையவர் தன்னை தாக்கினார் என ஆளுநர் சொல்கிறார் என்கிறார்கள் இடதுசாரிகள்.
உண்ணாவிரதத்தில் மோதல்!: கடந்த 2021 ஜூலை மாதம் திடீரென ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஓர் அறிக்கை வெளியானது. கேரளாவில் வரதட்சிணைக்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை ராஜ்பவனிலேயே மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். அறிவித்தது போலவே காலை 8 மணி முதல், மாலை 6 மணி வரை உண்ணாவிரதமும் இருந்தார். இந்தியாவில் ஆளுநர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தது அதுவே முதல்முறை.
கேரள அரசின் பல திட்டங்களுடன் ஆளுநர் முரண்பட்டு நிற்பதும், தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயனோ அல்லது அமைச்சர்களோ நேரில் சந்தித்து சமரசம் செய்வதுமாக இறுக்கமான உறவாகவே ஆளுநர் - கேரள அரசின் பந்தம் நகர்ந்துவந்தது.
ஆர்எஸ்எஸ் உடன் நெருக்கம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத், திருச்சூருக்கு வந்திருந்தார். அங்கு விரைந்த ஆளுநர் ஆரிப். மோகன் பாகவத்தை சந்தித்துத் திரும்பியதால் சர்ச்சை கிளம்பியது. ஆனால், ராஜ் பவனுக்கே செய்தியாளர்களை அழைத்து, “நான் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்ததில் தவறு இல்லை. நினைவுதெரிந்த காலம்முதல் நான் ஆர்எஸ்எஸ்தான்” என்றார்.
ஒருகட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, ‘இடதுசாரி தத்துவம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தது’ என மார்க்சிஸ்ட் கட்சியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கினார். இது இடதுசாரிகளுக்கும், அவருக்கும் இடையிலான உறவை இன்னும் விரிசலாக்கியது. ஒருபக்கம் கேரள இடதுசாரிகளுடனும் முதல்வர் பினராயி விஜயனுடனும் மோதிக்கொண்டிருந்த ஆளுநர் ஆரிப் முகமது கான் அண்மையில் நூறாவது அகவையை எட்டிய முன்னாள் முதல்வரும், இந்தியாவில் இப்போதிருக்கும் இடதுசாரி தலைவர்களில் மிக மூத்தவருமான அச்சுதானந்தனை நேரில் சந்தித்து வாழ்த்தியும் திரும்பினார்.
பல்கலை. வழக்கு: கேரளத்தில் உள்ள அப்துல் கலாம் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜஸ்ரீ நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பில் “துணைவேந்தர் நியமனத்தில் யூஜிசி.யின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. 3 பேரை ஆளுநருக்கு பரிந்துரைத்து அதில் ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த விதி பின்பற்றப்படவில்லை எனவே இந்த நியமனம் செல்லாது” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரளத்தில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் மறுநாளே ராஜினாமா செய்ய வேண்டும் என மேற்கண்ட வழக்கை உதாரணம் காட்டி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை சிறப்பு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் விசாரித்தார். ஆனால் அந்த விசாரணைக்கு முன்பே ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, "நவம்பர் 3–ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என துணைவேந்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் ஆளுநர் முடிவெடுக்கும் வரை பதவியில் தொடரலாம். அதேநேரம் விளக்கம் கேட்காமல் ராஜினாமா கோரியது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது கேரள உயர் நீதிமன்றம். தன்னை துணைவேந்தராக நியமித்தது சரியே எனதானே எப்படி விளக்கம் கொடுப்பது என துணைவேந்தர்களே விடைதெரியாத வினாவுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
விதிமீறல் நடந்ததா?: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களின்போதுவேந்தர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர்களுக்கு மூன்று பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலைக் கொடுக்கும் வழக்கம் கேரளத்தில் தொடக்கத்தில் இருந்தது. ஆளுநர் கையெழுத்துடன் நியமிக்கும் பொறுப்பு என்றாலும், இதில் மாநில அரசின் கையே ஓங்கியிருக்கும்.
கேரள மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தின் போது மூன்றுபேர் கொண்ட பட்டியலை ஆளுநருக்கு கேரள அரசு அனுப்பியது. அதில் முதல் பெயராக இருக்கும் பெயரைத்தான் ஆளுநர், துணைவேந்தர் ஆக்கியிருக்க வேண்டும். ஆனால் மூன்றாவது பெயராக இருந்த மோகனன் குன்னுமாலை நியமித்தார் ஆளுநர். இவர் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. இதோ இப்போதுகூட 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு காலியாக இருந்த கேரளப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பையும் கூடுதல் பொறுப்பாக மோகனன் குன்னுமாலுக்கே ஆளுநர் ஒதுக்கியுள்ளார் என்கிறார்கள் இடதுசாரிகள்.
ஆளுநர் தரப்பினரோ, "கண்ணூரில் ஆளுநரை தாக்க முயன்ற சம்பவத்தில் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக ஆளுநரே வெளிப்படையாக குற்றம் சாட்டினார். அதன் பின்பும் கோபிநாத் ரவீந்திரனை இரண்டாவது முறையாக துணைவேந்தர் ஆக்கியுள்ளனர். அதுவும் ஆளுநரின் கையெழுத்துப் பெற்று!” என ஆதங்கப்படுகிறார்கள்.
கிடப்பில் கோப்புகள்: லோக் ஆயுக்தா, பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரக் குறைப்பு உள்ளிட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் ஆளுநரிடம் கையெழுத்து ஆகாமல் கிடப்பில் உள்ளன. இந்நிலையில் கேரள அரசு, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி, வேந்தர் பதவியில் இருந்தே ஆளுநரைத் தூக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசனைக் கேட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் நிகழ்ச்சி ஒன்றில், ‘உத்தர பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு கேரளத்தைப் பற்றித் தெரியாது’ என்று தான் மார்க்சிஸ்ட் கட்சியில் தேசியப் பொறுப்பில் இருந்த கடந்தகால சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். கே.என்.பாலகோபால் தன்னைத்தான் தாக்கியுள்ளார் எனவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கவேண்டும் எனவும் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் கொடுத்துள்ளார் ஆளுநர். முதல்வர் பினராயி விஜயனோ, “ஆளுநர் பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் பாலகோபால் பேசவில்லை. இதில் உள்நோக்கமும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநர் மூலம் மாநில அரசை பாஜக மிரட்டுவதாக கேரள இடதுசாரிகள் இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்கின்றனர்.
ஆனால், “நாட்டையே உலுக்கிய ஷாபானு ஜீவனாம்ச வழக்கில் மதத்திற்கு அப்பால், மனிதக் கோட்பாட்டின் படி அந்தப் பிரச்சினையை அணுகியவர் ஆரிப் முகமது கான். அதில் இஸ்லாமிய வாக்கு வங்கியை மட்டுமே குறிவைத்த காங்கிரஸின் மதரீதியிலான அணுகுமுறை பிடிக்காமல்தான் 1986-ல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார் ஆரிப். அவர் எப்போதும் தன் மனதுக்கு சரியென தோன்றியதை செய்வதுதான் கடந்த கால வரலாறு” என்கிறார்கள் பாஜகவினர். ஆளுநர், ஆட்சியாளர்கள் இடையிலான மோதல் கேரளத்தில் இப்போதைக்கு ஓயாது போல் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT