Published : 27 Oct 2022 05:36 AM
Last Updated : 27 Oct 2022 05:36 AM

இங்கிலாந்திடமிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டுமா? - சிதம்பரம், சசி தரூர் கருத்துக்கு காங். மறுப்பு

புதுடெல்லி: சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பலர் ஏற்கெனவே உயர் பதவி வகித்துள்ளதால், எந்த நாட்டிடமும் இந்தியா பாடம் கற்கத் தேவையில்லை என ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகி உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் சிறுபான்மையினரை உயர் பதவியில் அமர வைத்துள்ளனர். இந்தியாவும் பெரும்பான்மை குறித்து பேசும் கட்சிகளும் பாடம் கற்க வேண்டும்” என பதிவிட் டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சசி தரூரும் இதேபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

பன்முகத்தன்மைக்கு மதிப் பளிப்பதுதான் இந்தியாவின் சிறப்புத் தன்மை. கடந்த1967-ல் குடியரசுத் தலைவராக டாக்டர் ஜாகிர் உசேன் பொறுப்பேற்றார். இப்பதவியை அலங்கரித்த முதல் சிறுபான்மையினர் இவர்தான். அதன் பிறகு பக்ருதின் அலி அகமது மற்றும் டாக்டர் அப்துல் கலாம் ஆகியோரும் இப்பதவியை வகித்துள்ளனர். இதுதவிர, பர்கத்துல்லா கான் (ராஜஸ்தான்), ஏ.ஆர்.அந்துலே (மகாராஷ்டிரா) ஆகியோர் மாநில முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். எனவே, சிறுபான்மையினருக்கு பதவி வழங்கும் விவகாரத்தில் எந்த நாட்டிடமும் இந்தியா பாடம் கற்கத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒவைசிக்கு பாஜக கேள்வி?: கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நேற்று முன்தினம் பேசும்போது, “ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பதை பார்க்க விரும்புகிறேன். நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க பாஜக மறுக்கிறது” என்றார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா கூறும்போது, “ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் என ஒவைசி நம்புகிறார். நல்லது. நமது அரசியல் சாசனத்தில் இதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால், ஹிஜாப் அணிந்தவர் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவராவது எப்போது? இதிலிருந்து தொடங்கலாமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அக்னிஹோத்ரி பதில்.. ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ‘காஃபிர்’ என்ற வார்த்தைக்கு தடை விதிக்கும்போது, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக நிபந்தனையின்றி குரல் கொடுக்கும் போது, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என ஏற்கும்போது, மற்ற எதையும்விட இந்தியாதான் முதன்மை எனும்போது, பாரத மாதாவுக்கு ஜே மற்றும் வந்தே மாதரம் என சொல்லும்போது முஸ்லிம் ஒருவர் பிரதமராவார். நீங்கள் தயாரா?” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x