Published : 26 Oct 2022 08:30 AM
Last Updated : 26 Oct 2022 08:30 AM

எந்த ஆதாரமும் இல்லாமல் கணவனை குடிகாரன் என அழைப்பது கொடுமை - மும்பை உயர் நீதிமன்றம் கருத்து

மும்பை: கணவனை அவதூறாகப் பேசுவதும் எந்த ஆதாரமும் இல்லாமல் கணவனை குடிகாரன் என்று சொல்வது கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் திருமண பந்தத்தை ரத்து செய்து புனே குடும்ப நலநீதிமன்றம் கடந்த 2005 நவம்பரில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அவரது மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அப்பெண் தனது மேல்முறையீட்டு மனுவில், “எனது கணவர் பெண் வெறியர் மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதன் காரணமாக அவர் தனது திருமண உரிமைகளை இழந்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.

ஆனால் பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறி அப்பெண் தனது கணவருக்கு மன வேதனையை ஏற்படுத்தியதாக எதிர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் நிதின் ஜாம்தார், ஷர்மிளா தேஷ்முக் ஆகியோரை கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, புனே நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.

நீதிபதிகள் தனது உத்தரவில், “மனுதாரர் தனது வாக்குமூலத்தை தவிர தனது கணவருக்கு எதிரானகுற்றச்சாட்டை நிரூபிக்க எவ்வித ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. கணவரின் நடத்தை குறித்து தேவையற்ற, பொய்யான மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அப்பெண் சுமத்தியுள்ளார். கணவனை குடிகாரன், பெண் வெறியன் என முத்திரை குத்தியுள்ளார். இது சமூகத்தில் கணவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கணவரை கொடுமைப்படுத்துவதற்கு சமமானது. எனவே குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம்” என்று கூறியுள்ளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x