Published : 25 Oct 2022 02:15 PM
Last Updated : 25 Oct 2022 02:15 PM

'கலாம், மன்மோகன் சிங்கை நினைவூட்டுகிறோம்...': மெகபூபா முப்தி குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி 

ரவிசங்கர் பிரசாத், மெஹபூபா முஃப்தி

புதுடெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்கள் குறித்து மெகபூபா முப்திக்கு நினைவுட்டுகிறோம் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ரிஷி சுனாக் பிரிட்டனின் பிரதமராகி இருப்பது குறித்து மெகபூபா தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராக திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்க உள்ளார். இதுகுறித்து தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களும், கருத்துக்களும் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,"பெருமையான தருணம் இது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டனின் பிரதமராக தேர்வாகி உள்ளார். இந்தியர்கள் அனைவரும் இதனைக் கொண்டாடி வரும் வேளையில், இது நமக்கெல்லாம் ஒன்றை நினைவுறுத்துகிறது. சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவரை பிரிட்டன் மக்கள் தங்களின் பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளனர். நாம் இன்னும் என்ஆர்சி, சிஏஏ போன்ற பிளவுபடுத்தும் பாரபட்சமான சட்டங்களால் கட்டுண்டு கிடக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த குற்றச்சாட்டிற்கு பாஜகவைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் தொடர்ச்சியியான ட்விட்டர் பதிவுகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் "மெகபூபா முப்தி ஜி, ஜம்மு காஷ்மீரில் இனச்சிறுபான்மையினர் ஒருவரை மாநில முதல்வராக நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? தயவு செய்து இதற்கு வெளிப்படையான பதிலைக் கூறுங்கள்

பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தடுக்கப்பட்டிருப்பது குறித்து பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக தீவிரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு நான், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் தலைமையையும், 10 வருடங்களாக மன்மோகன் சிங் நாட்டின் பிரதமாராக இருந்தது குறித்தும் நினைவுபடுத்துகிறேன். தற்போது நமது குடியரசுத் தலைவராக பழங்குடினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு இருக்கிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திறமையான தலைவரான ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது இந்த மகத்தான வெற்றிக்கு நாம் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால் சில தலைவர்கள் இந்த தருணத்திலும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x