Published : 25 Oct 2022 02:11 AM
Last Updated : 25 Oct 2022 02:11 AM

ஷிண்டே அணியின் 22 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்வார்கள் - உத்தவ் தாக்கரே தரப்பு தகவல்

மும்பை: மகாராஷ்டிரா ஒருபோதும் ஷிண்டேவை மன்னிக்காது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக.வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார். இந்நிலையில் கட்சி பெயர், வில் - அம்பு சின்னத்துக்கு உரிமை கோரி முதல்வர் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பினமும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். அந்தேரி கிழக்குதொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவுக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும் கட்சியின் சின்னமாக தீபச்சுடர் சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுக்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா (பாலாசாகேப்பின் சிவசேனா) என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உத்தவ் அணியைச் சேர்ந்த மேலும் 4 எம்எல்ஏக்கள் அணி மாறுவர் என மத்திய அமைச்சர் நாராயண் ராணே தெரிவித்தார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான செய்தியில், "ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் விரைவில் பாஜகவில் சேரப்போகின்றனர். மகாராஷ்டிராவில் தற்காலிக ஏற்பாடாக மட்டுமே முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை பாஜக நியமித்துள்ளது.

முதல்வர் பதவி எந்த நேரம் வேண்டுமானாலும் பிடுங்கப்படலாம். இது அனைவருக்குமே தெரியும். ஏக்நாத் ஷிண்டே மீது அவரின் அணியில் உள்ள 22 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் விரைவில் பாஜகவில் இணைவர். ஷிண்டே தனக்கும் மட்டுமல்ல, மகாராஷ்டிரா மாநிலத்துக்கே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். மகாராஷ்டிரா ஒருபோதும் ஷிண்டேவை மன்னிக்காது. பாஜக தனது தேவைக்கே ஷிண்டேவை பயன்படுத்தி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x