Published : 22 Oct 2022 06:20 AM
Last Updated : 22 Oct 2022 06:20 AM

அதிநவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1 முதல் 5 வரை என திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் ராணுவத்தில் உள்ளன. அடுத்தகட்டமாக அக்னி ஏவுகணை-6 விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அக்னி ரக ஏவுகணைகளில் பயன் படுத்தப்பட்ட தொழில் நுட்பங் களுடன் கூடுதல் அம்சங் களுடன் அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ‘அக்னி பிரைம்’ என்ற புதிய தலைமுறை ஏவு கணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்பகுதியில் புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை நேற்று காலை 9.45 மணிக்கு சோதித்து பார்க் கப்பட்டது. இந்த ஏவுகணை திட்டமிட்டபடி இலக்கை துல்லி யமாகத் தாக்கி அழித்தது. இந்த ரக ஏவுகணை 2,000 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க வல்லது. மேலும், அக்னி பிரைம் ஏவுகணைகளை ரயில், சாலை உட்பட எந்த இடத்தில் இருந்தும் ஏவ முடியும். நாட்டின் எந்தப் பகுதிக்கும் உடனடியாக கொண்டு செல்ல முடியும். நீண்ட காலத்துக்கு பாதுகாத்து வைக்க முடியும். அக்னி -3 ரக ஏவுகணையின் எடையை விட அக்னி பிரைம் ஏவுகணையின் எடை 50 சதவீதம் குறைவு.

இது 2 கட்டமாகக் கொண்ட திட உந்துசக்தியுடன் சீறி பாயக் கூடியது. அதிநவீன ரேடார்கள் மூலம் அக்னி பிரைம் ஏவுகணை செல்லும் பாதையை கண்காணிக்க முடியும். அதை வழிநடத்தவும் முடியும். இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர். ஏற்கெனவே, கடந்த 2021 ஜூன் மாதம் முதல் முறையாகவும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது முறையாகவும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. தற்போது 3-வது முறையாக சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x